கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Incன் கீழ் இயங்கங்கக் கூடிய முக்கியமான வீடியோ ப்ளாட்பார்ம் யூடியூப். எந்த வீடியோவாக இருந்தாலும் யூடியூப்பில் சென்று தேடுவதுதான் முதல் வேலை. யார் வேண்டுமென்றாலும் தனிக் கணக்கு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவேற்றலாம். அதனை மற்றவர்கள் பார்க்கும் பட்சத்தில் பார்க்கும் நபர்களுக்கு ஏற்ப ஒரு தொகை கொடுக்கப்படும். இதற்காக பலரும் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு. யூடியூப்பை பொறுத்தவரை விளம்பரங்களே அதற்கு வருமானத்தை தருகின்றன.  


அதாவது, வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றாலும் அதற்காகவும் தனி ப்ரீமியம் பேக்கேஜ் முறையை அந்நிறுவனம் வைத்துள்ளது. அதற்கு நீங்கள்  தனியாக கட்டணம் செலுத்தி ப்ரீமியம் பேக்கேஜை வாங்கிக்கொள்ளலாம். அட நமக்கு ஏன் விளம்பரம் இல்லாமல் விளம்பரத்தை பார்த்துவிட்டுதான் வீடியோ பார்க்கலாமே என்று நீங்கள்  யோசித்தால் வரும் காலத்தில் விளம்பரங்கள் உங்கள் பொறுமையைக்கூட  சோதிக்கும்.




5 விளம்பரங்கள்..


தற்போது நீங்கள் யூடியூப் சென்று ஒரு வீடியோவை பார்த்தால் ஒரு விளம்பரம் முழுமையான ஓடி பின்னர் நீங்கள் தேடிய வீடியோ ஓடும். அல்லது skip செய்யக்கூடிய ஒரு விளம்பரமுமும், skip செய்ய முடியாத ஒரு விளம்பரமும் ஓடும். அல்லது skip செய்யவே முடியாத முழு விளம்பரம் ஓடி முடியும். தற்போது யூடியூப் skip செய்யவே முடியாத 5 விளம்பரங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனையையும் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டது யூடியூப். அதாவது 5 விளம்பரங்கள் ஓடி முடிந்த பிறகுதான் நீங்கள் தேடி வந்த வீடியோவே கிடைக்கும். 


அந்த விளம்பரங்களின் நீளம் 6 நொடி முதல் 10 நொடிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அதிலும் ஏதேனும் மாற்றத்தை வைத்திருக்கலாம் என்கிறார்கள் பயனர்கள். யூடியூப் இதில் இருந்து கடுமையான லாபத்தை எதிர்பார்க்கிறது. அதாவது விளம்பரம் வேண்டாமென்றால் ப்ரீமியம் முறையில் பணம் செலுத்துங்கள் என்கிறது. அல்லது விளம்பரத்தை பாருங்கள் நாங்கள் விளம்பரம் தரும் நிறுவனத்திடம் பணத்தை பெற்றுக்கொள்வோம் என்கிறது. அதாவது எப்படி பார்த்தாலும் யூடியூப்புக்கு இது லாபம். வீடியோ தளத்தை பொறுத்தவரை யூடியூப்புக்கு சரியான போட்டி இல்லை என்பதால் அந்நிறுவனம் லாபத்தை நோக்கி தைரியமாக காய்நகர்த்துகின்றது.




இப்படி ஒருபுறம் லாபம் பார்க்க யூடியூப் யோசித்தால் பல 3ம் நிலை ஆப்கள் யூடியூப் விளம்பரத்துக்கு ஆப்பு வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. adblockers என்ற பல செயலிகள் விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்க்க உதவுகின்றன. ஆனால் இணையத்தில் கிடைக்கும் செயலிகளை நாம் பயன்படுத்துவது பாதுகாப்பற்ற முறையாகும். இதற்கு எதிராக யூடியூப்பும் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற 3ம்நிலை செயலிகளால்தான் வைரஸ்கள் நுழைவது, ஹேக் செய்யப்படுவது போன்ற வேலைகளும் நடக்கின்றன.