கடந்த ஆண்டு முதல் கொரோனா என்ற வார்த்தை உலகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கியது. கொரோனாவுக்கு பிறகு மக்களின் வழக்கமான வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் முக்கியமானது Work from Home. கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணியாளர்களை வேலை பார்க்க அனுமதிக்கவேண்டும் என நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்க அனுமதி அளித்தது.
நேரடியாக அலுவலகத்திற்கு வருகைதர தேவையில்லாத, இணையத்தில் இணைந்தே வேலை பார்க்கலாம் என்ற நிலையில் இருந்த பணியாளர்கள் இந்த முறையில் வேலை செய்தனர். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், கூகுள் போன்ற பல பெரிய நிறுவனங்கள் இந்த வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையை பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக்கவும் யோசித்தன. காரணம் லாபம். ஊழியர்கள் அலுவகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் நிறுவனத்திற்கு பல வகைகளில் லாபம் வருகிறது. அலுவலக சூழலில் ஊழியர்களுக்கு தேவையான சிறு சிறு தேவைகளும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் நிறுவனம் வழங்க தேவையில்லை என்ற நிலை உள்ளது. அந்த வகையில் நிறுவனங்கள் Work from Home முறையை ஆதரிக்கின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு வொர்க் ஃப்ரம் ஹோம் முறையால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7400 கோடி ரூபாய் ஆகும்.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா பரவல் காரணமாக கூகுள் நிறுவனம் சுமார் 1.3 லட்சம் பணியாளர்களை உலகளவில் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி அளித்துள்ளது. இந்த வருடமும் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர்.
உணவு, மசாஜ் போன்ற ஊழியர்களுக்கான சொந்த விருப்பங்கள் பலவற்றை சலுகைகளாக கூகுள் வழங்குகிறது. ஆனால்,தற்பொது ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால்,கூகுள் அதிக அளவிலான பணத்தை சேமித்துள்ளது. மேலும் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் விளம்பரங்கள், பயண செலவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் செலவுகளையும் கூகுள் குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் காலாண்டில் சுமார் ரூ.1,987 கோடி சேமித்துள்ளது.
கூகுள் இந்த வருடம் செப்டம்பரில் பல அலுவலகத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து இடங்களிலும் அலுவலகம் திறப்பு சாத்தியப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பிய பல நாடுகளிலும் மீண்டும் அலுவலகத்தை கூகுள் திறக்கும் என்றே தெரிகிறது.