இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்றே வாட்ஸப்பிலும் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதியை கொண்டுவரும் முயற்சியில் வாட்ஸப் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


வாட்ஸப்பில் மிகவும் பிரபலமான, பயனாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு வசதியாக ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும் வசதி இருக்கிறது. இந்த வசதியினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது வாட்ஸப் நிறுவனம். WABetaInfoன் தகவலின் படி ஸ்டேட்டஸை சேட்லிஸ்டிலேயே பார்க்கும் படியான வசதியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது வாட்ஸப் நிறுவனம். தற்போதைய நிலையில் ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கும் நிலையில், அதை சேட்லிஸ்ட்டில் இருந்தே பார்க்கும் படியான வசதியை உருவாக்குகிறது.




இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதியைப் பற்றி தெரிந்திருக்கும். யாரேனும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருந்தால், அது சேட் லிஸ்ட்டில் இருப்பவரின் புகைப்படத்தைச் சுற்றி வட்டமாகக் காண்பிக்கும். அதை க்ளிக் செய்து நேரடியாக ஸ்டேட்டஸை பார்த்துக் கொள்ளலாம். அதே வசதியைப் போன்றே வாட்ஸப்பிலும் கொண்டுவரும் வேலைகளில் இருக்கிறது வாட்ஸப் நிறுவனம். இந்த வசதி இன்னும் உருவாக்கத்திலேயே இருப்பதாகவும், இந்த வசதி தற்போதைக்கு பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியானது பின்னாளில் வாட்சப் வெப்பிற்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்களில் இது விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போது இந்த அப்டேட் வெளியாகும் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


அதே போல வாட்சப் ஸ்டேட்டஸிற்கு ரியாக்ட் செய்யும் வசதியை உருவாக்கும் பணிகளிலும் இருக்கிறது வாட்சப் நிறுவனம். தற்போதைய நிலையில் ஸ்டேட்டஸிற்கு ரியாக்ட் செய்யவேண்டுமென்றால் அதை க்ளிக் செய்து மெசேஜாக அனுப்ப வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால், ஃபேஸ்புக் ஸ்டோரிசுக்கு ரியாக்ஸன் இடுவது போன்றே லைக், ஹார்ட்டின், கைதட்டுதல் உள்பட எட்டு எமோஜிக்கள் மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்சப். 




மேலும், குரூப் போல் (Group Poll) வசதியை உருவாக்கும் பணிகளிலும் வாட்சப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டெலக்ராமில் இந்த வசதி தற்போது இருக்கும் நிலையில் அதேபோன்ற வசதியை வாட்சப்பிலும் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது வாட்சப் நிறுவனம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதில் தாங்கள் எதற்கு வாக்களிகக் வேண்டுமோ அதற்கு வாக்களிக்கலாம். எந்த ஆப்சனுக்கு எவ்வளவு வாக்குகள் என்ற விவரங்கள் அதில் தெரியவரும். ஆனால் யார் எந்த ஆப்சனுக்கு வாக்களித்தார்கள் என்ற விவரம் எதுவும் தெரியாது. மற்ற மெசேஜ்களைப் போலவே இதுவும் எண்ட் டூ எண்ட் முறையில் இருக்கும்.




மேற்கண்ட அப்டேட்கள் உருவாக்க நிலையிலும், சோதனை நிலையிலும் தான் இருக்கிறது. இந்த வசதிகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.