கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் செயலி,  தற்போது தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியா தொழில்நுட்பமாக மாறியுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்-அப் செயலி, பயனாளர்கள் வேறு செயலிகளுக்கு மாறுவதை தவிர்க்க, அவர்களை ஈர்க்க அடுத்தடுத்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்-அப் செயலியின் அபரிவிதமான வளர்ச்சிக்கு பயனர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து அவ்வப்போது  வழங்கப்படும், இந்த அப்டேட்களும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


அடுத்தடுத்து வழங்கப்பட்ட அப்டேட்கள்:


உதாரணமாக,  வாட்ஸ்-அப் செயலியில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சம், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதி, லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கை இணைக்க லிங்க்ட் டிவைஸ் வசதி  போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. 


அண்மையில் வெளியான புதிய வசதி:


பயனர்கள் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து தங்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் படிப்படியாக புதிய வசதி கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில் தான் அடுத்தடுத்து 5 புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக, WABetainfo தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.


1. பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட்:


முதலாவதாக பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் எனும் புதிய வசதியை, ஐ-போன் பயனாளர்களுக்கு வாட்ஸ்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக, WABetainfo அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஐ-போன் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசும்போது, அந்த செயலியை விட்டு வெளியேற முடியாது. வேறு செயலியை பயன்படுத்தவும் முடியாது. ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள  பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட் வசதி, அந்த பிரச்னைக்கு தீர்வாக அமைய உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.


2. புதிய எமோஜிக்கள் அறிமுகம்:


பயனாளர்களின்  சாட் செய்யும் அனுபவத்தை மேம்படுத்த அண்மையில் புதியதாக 8 எமோஜிக்கள் வாட்ஸ்-அப் செயலியில்  அறிமுகப்படுத்தப்பட்டன. அதைதொடர்ந்து, புதியதாக மேலும் 21 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும்,  பல்வேறு நாட்டு மக்களின் தோலின் நிறத்திற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்படுவதாகவும்  WABetainfo தெரிவித்துள்ளது.


3. எளிய சர்ச்சிங் வசதி:


தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப் செயலியில் ஏதேனும் குறிப்பிட்ட குறுந்தகவல்களை பார்க்க  வேண்டுமென்றால், மொத்தமாக பழைய குறுந்தகவல்கள் முழுவதையும் புரட்டி போட்டு தேட வேண்டி உள்ளது. ஆனால், விரைவில் வர உள்ள புதிய அப்டேட் மூலம், தேதியை பதிவிட்டு தேடினால் குறிப்பிட்ட நாளில் அனுப்பிய குறுந்தகவல்களை எளிதாக பெற முடியும் எனும் வகையில், புதிய அம்சம் வடிவமைக்கப்படுகிறது. 


 


4. தலைப்புடன் பகிரும் வசதி:


புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF ஃபைல்கள் ஆகியவற்றை பகிரும்போது, விருப்பப்பட்டால் இனி தலைப்புடன் அவற்றை பகிரலாம் எனவும், இது பிற்காலத்தில் தேடும்போது அந்த பணியை எளிமையாக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. டேப்லெட்களில் வாட்ஸ்-அப் செயலி


டேப்லெட்களில் நேரடியாகவே வாட்ஸ்-அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்டேட் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதுநாள் வரை செல்போன் எண் இருந்தால் மட்டுமே, டேப்லெட்டில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியும். புதியதாக வர உள்ள அப்டேட் மூலம், டேப்லெட்டில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த இனி செல்போன் தேவைப்படாது என கூறப்படுகிறது. 


மேலே குறிப்பிட்ட பல புதிய அம்சங்கள் ஏற்கனவே சோதனை முயற்சியில் சில பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு, படிப்படியாக மற்ற பயனாளர்களுக்கு கிடைக்கப்பெற்று வருகிறது. டேப்லெட்களுக்கான வாட்ஸ்-அப் செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.