உலக அளவில் வாட்ஸ்-அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தனியுரிமை கொள்கை சம்பந்தமான புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் நிறுவனம் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இது வாட்ஸ்-அப் நிறுவனத்தில் தனியுரிமைக் கொள்கை என்றாலும், பயனர்களுக்கான பிரைவசி என்பதை வாட்ஸ்-அப் போன்ற மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலிகள் உறுதி செய்ய வேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால், பலர் வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் தங்களது மார்க்கெட்டை விரிவுப்படுத்த பார்த்தன. ஆனால். சுதாரித்துக்கொண்ட வாட்ஸ்-அப் நிறுவனம் நிபந்தனைக்கான கால நேரத்தை நீட்டித்தது.



மே 15-ஆம் தேதி வரை கால நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இன்றே கடைசிநாள். இது குறித்து சமீபத்தில் வாட்ஸ்-அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட செய்தியில்,  ‛மே 15க்கு பிறகு நிச்சயம் எந்த கணக்குகளும் டெலிட் செய்யப்படாது. நாங்கள் தொடர்ந்து சில வாரங்களுக்கு பயனர்களுக்கு நினைவூட்டுவோம். மே 15க்கு பிறகு புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு வாட்ஸ்-அப் செயலியின் முக்கிய வசதிகள் முடக்கப்படும்’ என தகவல் தெரிவித்துள்ளது. இந்த முடிவு கணக்கு டெலிட் செய்யப்படுவதை காட்டிலும் மோசமானதாக இருக்கும் என சமூக வலைதளத்தில் கருத்துகள் வெளியாகியுள்ளது.






 மே 15-ஆம் தேதிக்கு பிறகும், பயனர்கள் புதிய நிபந்தனையை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஏற்றுக்கொள்ள தவறுபவர்களுக்கு முதலில், புதிய நிபந்தனையை ஏற்கும்படி பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து நினைவூட்டல்களை அனுப்பும். அதன்பிறகும் புதிய நிபந்தனையை ஏற்காத கணக்குகளில், சாட் லிஸ்டை பயன்படுத்த முடியாது.  மேலும், அழைப்புகள், வீடியோ அழைப்புகள் போன்ற வசதிகளுக்கு பதில் அளிக்க முடியாது. இப்படி படிப்படியாக வாட்ஸ்-அப் செயலியின் முக்கியமான வசதிகளை முடக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என வாட்ஸ்-அப் நிறுவனம் அதிரடியாக தெரிவித்துள்ளது. நினைவூட்டல்களுக்கு பிறகும், புதிய நிபந்தனையை ஏற்காத கணக்குகளுக்கு அழைப்புகள், நோட்டிஃபிகேஷன்கள் ஆகிய வசதிகளும் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் இன்றும் பலருக்கு ஆஸ்தான அப்ளிகேஷன். இந்த புதிய கட்டுப்பாடுகள் எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்