WhatsApp scam alert: வாட்ஸப்பில் வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று சைபர் செக்யூரிட்டி பிரிவு அறிவுறுத்தியுள்ளது.


வாட்ஸப்பில் தெரியாத எண்களில் இருந்து வரும் வெளிநாட்டு அழைப்புகளை ஏற்க வேண்டாம் என தெலங்கானாவின் சைபர்பாத் காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறித்தியுள்ளனர்.


எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனீசியா (+62), கென்யா (+254), வியட்னாம் (+84) ஆகிய முன் இணைப்பு எண்களில் இருந்து வரும் அழைப்புகள் பொதுமக்கள் ஏற்க வேண்டாம். இந்த அழைப்புகள் மூலம் மோசடி நடப்பதாகவும். வங்கி கணக்குகளின் விவரங்களை மோசடி கும்பல் எடுத்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த அழைப்புகளுக்கு பதிலளிப்பவர்களிடம் இருந்து மோசடி கும்பல் பணம் திருடிவிடுகின்றனர்.






இந்த மோசடி கும்பல் பெரும் நிறுவனங்களின் பெயர்களில் உலவுகின்றனர். வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ஏமாற்றி பணம் பெறுகின்றனர்.


வாட்ஸ் அப் அறிவுறுத்தல்:


கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் வரும் தேவையில்லாத மோசடி அழைப்புகளை ரிப்போட் / ப்ளாக் செய்யுமாறு வாட்ஸ் அப் தனது பயனர்களை கேட்டுகொண்டுள்ளது. தெரியாத எண்களில் இருந்து வரும் வெளிநாட்டு/ உள்நாட்டு அழைப்புகளுக்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பயனர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத அழைப்புகளை ப்ளாக் செய்ய வேண்டும்.


வாட்ஸ்-அப் செயலியில் ட்ரூ காலர் பயன்பாடு:


அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூ காலர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் மாமேடி , வாட்ஸ் - அப் உள்ளிட்ட குறுந்தகவல் அனுப்பும் செயலியிலும் தங்களது சேவை விரைவில் தொடங்க உள்ளது. புதிய வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், மே மாத இறுதியில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவித்தார். 


ட்ரூ-காலர் பயன்பாடு:


உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக செல்போன்கள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தாலும், தற்போது அது முழுமையாக வணிக நோக்கமாக மாறியுள்ளது. வீட்டிற்கான தேவையான சிறு பொருட்கள் முதற்கொண்டு வீட்டையே வாங்கும் வரையிலான பல விளம்பரங்கள் மற்றும் அதற்கான முகவர்கள் செல்போன்கள் மூலம் தான் அதன் பயனாளர்களை அணுகுகின்றனர்.


அதில் ஒரு சில அழைப்புகள் பயனுள்ளதாக இருந்தாலும், பெரும்பாலானவை அநாவசியமானதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளன. அழைப்பை மேற்கொள்வது யார் என்று தெரியாத சூழலில், புதிய எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளையும் ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தான் ட்ரூ-காலர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.   அறிமுகம் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்தாலும் அது யார் என்பது தொடர்பான விவரங்களை ட்ரூ - காலர் செயலி மூலம் அறியலாம்.