ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். 


அதன்படி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலியும் பெங்களூரு அணியின் கேப்டனுமான டூ பிளசிஸும் தொடங்கினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸினை கேப்டன் ரோகித் சர்மாவும் இஷான் கிஷானும் தொடங்கினர். ரோகித சர்மா நிதானமாக ஆட இஷான் கிஷான் அதிரடியாக ஆடினார். ஆனால் இவர்கள் கூட்டணியை ஐந்தாவது ஓவரை வீச வந்த ஹசரங்காவிடம் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க போட்டி முதல் இன்னிங்ஸைப் போல இருந்தது. 


அதன் பின்னர் கூட்டணி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் வதேரா பெங்களூர் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் தங்களின் கரங்களில் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அதிரடியாக ஆடினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் தனது ருதரதாண்டவ ஆட்டத்தினால் பெங்களூரு பந்து வீச்சை தண்டித்தார். 35 பந்தில் 83 ரன்கள் குவித்த அவர் 16வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் மும்பை அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்குச் சென்றது. 


மும்பை அணியின் வெற்றிக்கு காரணம் மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த சூர்யகுமார் யாதவும் வதேராவும் 140 ரன்கள் சேர்த்தது தார். இருவரும் தங்களது பங்கிற்கு மொத்தம் 11 பவுண்டரியும் 9 சிக்ஸர்களும் விளாசித் தள்ளினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரியும் 6 சிக்ஸரும் பறக்கவிட்டார். 835 பந்தில் 83 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவுக்கு உறுதுணையாக இருந்த வதேரா 34 பந்தில் 52 ரன்கள் சேர்த்து இறுதி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவிற்கு மேன் ஆஃப் த மேட்ச் விருது வழங்கப்பட்டது. 


இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், இந்த சீசனில் மூன்று முறை 200 மற்றும் 200 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் பெற்ற தோல்வியால் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 6வது இடத்துக்குச் சென்றுள்ளது. இனிவரும் மூன்று போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் தான் ப்ளேஆஃப்க்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.