வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை தரம் குறையாமல் பகிரும் வசதியை, மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
குவியும் அப்டேட்கள்:
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நீண்ட நாட்களாக பயனாளர்கள் எதிர்கொண்டு வந்த ஒரு பெரிய பிரச்னைக்கு, வாட்ஸ்-அப் நிறுவனம் ஒரு முடிவு கட்டியுள்ளது.
தரம் குறையும் புகைப்படங்கள்:
அதன்படி, வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை நேரடியாக பகிரும்போது அதன் தரம் குறைகிறது என்பது, பயனாளர்களின் நீண்ட கால புகாராக உள்ளது. தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, அவற்றை ஃபைல் ஆக மட்டுமே பகிர முடியும். இந்நிலையில் பயனர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ்-அப் செயலி, ஏற்கனவே பீட்டா வெர்ஷன் அப்டேட்டை வழங்கியிருந்த நிலையில், தற்போது அதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்:
புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் உண்மையான தரம் குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும். அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் (HD) ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் தரம் குறையாமல் உறுதி செய்யலாம். STANDARD QUALITY & HD QUALITY என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, பயனாளர்கள் STANDARD QUALITY எனும் ஆப்ஷனை ஆன் செய்து இருக்க வேண்டும்.
யாருக்கு இந்த அப்டேட் கிடைக்கும்?
இந்த புதிய அப்டேட் ஏற்கனவே உருவாக்கப்பட்டு பீட்டா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பயனாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப அந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 2.23.12.13க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும், ஐஓஎஸ் 23.11.0.76 க்கான வாட்ஸ்அப் பீட்டாவிலும் இந்த புதிய அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ்-அப் குழுமம் புதிய அம்சத்தை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. எனவே, இந்த புதிய அம்சம் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கப்பெற சிறிது காலம் ஆகும் என கருதப்படுகிறது. இதன் மூலம், நீண்ட காலமாக வாட்ஸ்-அப் செயலியில் இருந்த பெரிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. அதோடு, புகைப்படங்களை இனி ஃபைல் ஆக கன்வெர்ட் செய்து பகிர வேண்டிய அவசியம் பயனாளர்களுக்கு இருக்காது. இனி நொடிப்பொழுதில் உண்மையான தரத்தில் புகைப்படங்களை பயனாளர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.