ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால், நேருக்கு நேராக அரசியல் களத்திற்கு வந்து மோதட்டும் என முரசொலி நாளிதழ் இன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியான கட்டுரையில், “ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழுமையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை!
ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிரான அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார் ஆர்.என். ரவி. அதேநேரத்தில் மற்ற பல மாநிலத்தின் விழாக்களை இங்கே உட்கார்ந்து கொண்டு கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.
- குஜராத் மாநிலம் உருவான தினம்
- மகாராஷ்டிரா மாநிலம் உருவான தினம்
- மிசோரம் மாநிலம் உருவான தினம்
- கோவா மாநிலம் உருவான தினம்
- தெலுங்கானா மாநிலம் உருவான தினம்
- என்று மற்ற மாநிலங்கள் உருவான தினத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். பொழுது போகவில்லை என்றால் ஊரில் உள்ள அனைவர் பிறந்தநாளையும் கொண்டாடிக் கொள்ள வேண்டியது தான். மனதுக்குள் இந்திய நாட்டையே தான் ஆள்வதாக அவர் நினைத்துக் கொள்கிறார் போலும்!
''தமிழ்நாடு' என்று சொல்லக் கூடாதாம். ஆனால் மற்ற மாநில விழாக் களை தமிழ்நாட்டில் கொண்டாடுவாராம். "மாநிலங்களே எதற்காக?' என்று கேட்பாராம். ஆனால் வாராவாரம் மாநில விழாக்களைக் கொண்டாடுவாராம். 'மாநிலங்களே இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கிறதாம்". ஆனால் அவர் மட்டும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்து கொண்டு அதிகாரத்தை அனுபவிப்பாராம். எத்தகைய ஏமாற்று இது?!
புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தப் போவதாக ஆளுநர் சொன்னார். இணைவேந்தரான எனக்கே தெரிவிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தை எப்படி நடத்தலாம்?" என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி கேட்டார். உடனே பதுங்கினார் ஆளுநர், புதிய கல்விக் கொள்கை பற்றிய ஆலோசனைக் கூட்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்ட கருத்துருவையே மாற்றி, தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் மாநாடு போல மாற்றிச் சொன்னார்கள். தாய்மொழிக்கல்வி குறித்து ஆளுநருக்கு ஏதாவது கருத்து இருக்குமானால் அதனை தமிழ் நாடு அரசுக்கோ அமைச்சருக்கோ தான் சொல்ல வேண்டுமே தவிர துணைவேந்தர்களை எல்லாம் ஊட்டிக்கு அழைத்து சொல்ல வேண்டிய அவசர அவசியம் என்ன வந்தது?
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதைப் பற்றி பேசி இருக்கிறார் ஆளுநர். துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும். தொழிலதிபர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியவில்லை?
தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வந்து கொண்டு இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 250க்கும் மேற்பட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் இவை. தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. உலகளாவிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டை வரும் 2024 சனவரியில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். துபாய் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். பத்து நாள் பயணமாக ஜப்பான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று ரூ.3000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைத்துள்ளார். ஐயகோ! தமிழ்நாடு முன்னேறிவிடுமோ?' என்று சில வயிற்றெரிச்சல் பேர்வழிகள் அலறுவதைப் போல ஆளுநரும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டார் போலும்!
'நாம் வேண்டுகோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக் குச் சென்று பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள். முதலீடு செய்வதற்கேற்ற சூழலும் திறண்பெற்ற மனித ஆற்றலும் இருந்தால்தான் முதலீட்டாளர்கள் முன் வருவார்கள்' என்று தனது பொறாமைக் குணத்தை வார்த்தைகளால் முணுமுணுக்கிறார் ஆளுநர். முதலீட்டுச் சூழலும் திறன் பெற்ற மனித ஆற்றலும் இங்கு இருப்பதால் தான் தமிழ்நாட்டை நோக்கி நிறுவனங்கள் வருகின்றன. அதனை இவர்கள் எல்லாம் கெடுக்காமல் இருந்தால் போதும். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் - சோழிங்கநல்லூரைச் சுற்றி வந்தால் போதும் உருவாகி நிற்கும் நிறுவனங்கள் பலதும் தமிழினத் தலைவர் கலைஞரின் 1996-2001 ஆட்சி காலத்தில் மலர்ந்தவை. அப்போது எந்த ஆர்.என்.ரவிக்கள் அறிவுரைப் படி இதனைச் செய்யவில்லை கலைஞர். இந்தியாவில் யாரும் உருவாக்க முன் வராத காலத்தில் உலக ஐ.டி.நிறுவனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க டைடல் பார்க் கட்டியவர் கலைஞர். அதனால்தான் அவரது பெயரால் மிகப் பெரிய கன்வென்ஷன் சென்டர் உருவாக்க இருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த மாநிலத்துக்கும், மாநில மக்களுக்கும் எதைச் செய்து தர வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குத் தெரியும். ஏனென்றால் தி.மு.க.என்பது தமிழ் மண்ணில் மலர்ந்து 75 ஆண்டுகளைக் கடந்து வளர்ந்து நிற்கும் - காலா காலத்துக்கு நிற்கும் ஆலமரம் ஆகும். ஆளுநர் பதவி என்பது ஒன்றியத் தலைமையால் தற்காலிகமாக கொண்டு வந்து வைக்கப்படும் குரோட்டன்ஸ் தொட்டி, தொட்டி, தோப் பாகாது. எனவே, வெட்டிப் பேச்சுகளை விடுக்க ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறோம்!” என தெரிவித்திருந்தது.
(குறிப்பு:முரசொலி நாளிதழின் உள்ளடக்கம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.)