ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.


குறிப்பாக 2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து புதுப்புது அப்டேட் தொடர்பான பல தகவல்களை வாட்ஸ் அப் அறிவித்து வருகிறது. ஒவ்வொரு அப்டேட்டும் சோதனை  முறையில் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் அறிமுகமாகும். இந்த நிலையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் புது அப்டேட்டை வாட்ஸ் அப் விரைவில் கொண்டு வரவுள்ளது. அதற்கான சோதனை முயற்சியில் தற்போது அந்நிறுவனம் இறங்கியுள்ளது


என்ன அப்டேட்?  


ஏதாவது நல்ல நியூஸ் லிங்க் என்றாலோ,வீடியோ லிங்க் என்றாலோ வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்து அதை நம்  நண்பர்களுக்கு தெரியப்படுத்துவோம். அது ஒரு லிங்காகவே இருக்கும், அதனை யார் க்ளிக் செய்தாலும் அந்த லிங்க் தொடர்பான வெப் பேஜ் ஆபன் ஆகும். இந்த முறையில் தற்போது அப்டேட் கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப்.  அதாவது ஸ்டேட்டஸாக வைக்கப்படும் லிங்குக்கு இனி ப்ரிவியூ காட்ட வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அதாவது அந்த லிங்க் என்ன என்பதை அங்கேயே சிறு விளக்கமாககாட்டும், அதில் ஆர்வம் இருந்தால் மேற்கொண்டு க்ளிக் செய்து முழு செய்தியையோ வீடியோவையோ பார்க்கலாம். வேண்டாமென்றால் விட்டுச்செல்லலாம்.


தற்போது  iOS beta versionல் சோதனை முறையில் இருப்பதாகவும், இனி விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் வெப் வெர்ஷனில் கொண்டு வர வாட்ஸ்  அப் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




எமோஜி அப்டேட்..


நீண்ட நாட்களாக வாட்ஸ் அப்பில் எதிர்பார்க்கப்பட்ட எமோஜி அப்டேட் சமீபத்தில் அறிமுகமானது. முன்னதாக, பேஸ்புக்கில் லைக் மட்டுமே செய்யும் வசதி இருந்தது. பின்னர் அது எமோஜி ரியாக்‌ஷன்களாக அப்டேட் செய்யப்பட்டது. லைக், சோகம், சிரிப்பு என 6 ரியாக்‌ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதேபோல் எமோஜி ரியாக்‌ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில்  பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைவருக்கும் அறிமுகமாகியுள்ளது. சேட் செய்யும் போது குறிப்பிட்ட மெசேஜை அழுத்திப்பிடித்தால் குறிப்பிட்ட எமோஜிகள் கிடைக்கும். அப்டேட்டின்படி, லைக், லவ், சிரிப்பு, ஆச்சரியம்,  சோகம், நன்றி ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் வாட்ஸ் அப் சேட்டை சுவாரஸ்யமாக்கும் எனத் தெரிகிறது.


Poll ஆப்ஷன்


புதிதாக குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். Poll ஆப்ஷன் ஏற்கனவே பேஸ்புக்கில் நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்த விஷயம். வாட்ஸ்அப்பில் எப்படி என்றால், குரூப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, பலவித ஆப்ஷனோடு ஓட்டெடுப்பு நடத்தலாம். எந்த ஆப்ஷனுக்கு குழுவின் உறுப்பினர்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இறுதியில் அறிய முடியும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளுக்கு இதுபோன்ற Poll ஆப்ஷன் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.