வாட்ஸ்-அப் செயலி:


எளிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம்  குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின்  மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.  டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்வதோடு இந்த செயலியில் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் எளிதாக அனுப்ப முடிகிறது. இது பயனாளர்களை கவரும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.


அடுத்தடுத்து வரும் அப்டேட்:


மெட்டா நிறுவனம், வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துவதில் பயனர்களை திருப்தி அடைய செய்வதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் வாட்ஸ்-அப் செயலியில் பல்வேறு புதிய அப்டேட்கள் அடுத்தடுத்து வழங்கப்பட்டன. அந்த வரிசையில் நடப்பாண்டிலும் வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்காக புதிய அபெடேட் ஒன்று விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.






ஆண்ட்ராய்ட் டு ஆண்ட்ராய்ட் டிரான்ஸ்பர்:


வாட்ஸ்-அப் செயலியில் உள்ள சாட் ஹிஸ்டரியை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து ஐஒஎஸ்-ற்கும் அதிலிருந்து மற்றொரு ஐஒஎஸ்-ற்கும் மாற்றும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அதைதொடர்ந்து தற்போது, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ்-அப் சாட் ஹிஸ்டரியை வேறொரு ஆண்ட்ராய்ட் போனிற்கு மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.


”கூகுள் டிரைவ் தேவைப்படாது”


தற்போதைய சூழலில் ஆண்ட்ராய்ட் வாட்ஸ்-அப் பயனாளர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர தரவுகள் அடங்கிய தங்களது சாட்-ஹிஸ்டரியை கூகுள் டிரைவில் பேக்-அப் எடுக்கும் வசதி உள்ளது. பயனாளர்கள் புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு தங்களது வாட்ஸ்-அப் கணக்கை மாற்றினால், உடனடியாக கூகுள் டிரைவின் உதவியுடன் தங்களது பழைய போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஸ்மார்ட் போனிற்கு பரிமாறிக்கொள்ளலாம். எனவே, பழைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு மாற்ற வேண்டுமானால், கூகுள் டிரைவின் உதவி என்பது கட்டாயமாக உள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் தான், வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்பட உள்ளது.


புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?


புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் கூகுள் டிரைவின் உதவியின்றி பயனாளர்கள் தங்களது சாட் ஹிஸ்டரியை ஆண்ட்ராய்ட் டு ஆண்ட்ராய்ட் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு பயனாளர்கள் தங்களது வாட்ஸ்-அப் செயலியில் Settings> Chats > Chat transfer to Android எனும் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.