நாம் அனுப்பும் சில வாட்ஸ்அப் செய்திகளை சில நேரங்களில் தவறான நபருக்கோ, அல்லது தவறான மெஸேஜை அனுப்பியிருந்தால் அதனை டெலிட் செய்வதற்கு வாட்ஸ்அப் நமக்கு வழிகள் வழங்குகிறது. அதற்காக ‘Delete for Everyone’ அம்சம் முதலில் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது வாட்சப் அதன் பயனர்களுக்கு வழங்கும் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். தற்செயலாக ஒரு குரூப் அல்லது தனிப்பட்ட சாட்டிற்கு தவறான செய்தியை அனுப்பியிருந்தால், இந்த ஆப்ஷனை கொண்டு அந்த தவறுதலான மெஸேஜை யாரும் காணாமல் டெலிட் செய்ய முடியும். வாட்ஸ்அப் முதலில் ஏழு நிமிட கால வரம்புடன் இந்த அம்சத்தை வழங்கியது மற்றும் சில மாதங்களுக்குப் பிறகு, அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது. அந்த கால அளவை தாண்டிவிட்டால் அந்த ஆப்ஷன் காணாமல் போய் விடும், அதனை பயன்படுத்த முடியாது. தற்போது டெலிட் ஃபார் எவரிஒன் ஆப்ஷனை பயன்படுத்த 1 மணி நேரம், 8 நிமிடம், 16 நொடிகளாக கால அளவு உள்ளது.
வெகு நாட்களாக அதன் கால அளவை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய வாட்ஸ்அப் நிறுவனம் இறுதியாக ஒரு முடிவை எட்டியுள்ளது. தற்போதைய அறிவிப்புகளின்படி வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தின் கால வரம்பை 7 நாட்களாக மாற்ற உள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் இருவேறு கால அளவுகள் கொண்டு டெஸ்ட் செய்து பார்த்துள்ளது. வாட்ஸ்அப் அம்சங்களைக் கண்காணிக்கும் Wabetainfo ஆனது, எதிர்கால அப்டேட்டில் கால வரம்பை 7 நாட்கள் மற்றும் 8 நிமிடங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக WhatsApp உறுதிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றது. முன்னதாக, வாட்ஸ்அப் டெலிட் ஃபார் எவரிஒன் ஆப்ஷனுக்கான நேர வரம்பை நீக்கி, பல மணிநேரம், நாட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் அனுப்பிய பிறகு அனைவராலும் மெசேஜ்களை நீக்கும் ஆப்ஷனை பயனர்களுக்குத் திறந்து வைத்திருக்கும் என்றும் ஊகிக்கப்பட்டது. ஆனால் இப்போது வாட்ஸ்அப் தற்போதைய காலக்கெடுவை நீட்டிக்க மட்டுமே திட்டமிட்டுள்ளது.
இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் இருப்பதாக வாட்ஸ்அப் டிப்ஸ்டர் தெரிவிக்கிறது, எனவே வாட்ஸ்அப் அதன் திட்டத்தை மீண்டும் மாற்றலாம் அல்லது புதிய கால வரம்பை அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது. ஒரு செய்தியை நீக்குவதற்கான கட்டுப்பாடுகளை WhatsApp முழுமையாக நீக்குமா அல்லது பிற்காலத்தில் நேர வரம்பை மாற்றுமா என்பதை இறுதி வெளியீடு வந்த பிறகே உறுதிப்படுத்த முடியும். அது 7 நாட்களாக அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்புடைய செய்தி குறிப்பில், ஆடியோ செய்திகளுக்கான புதிய பிளேபேக் ஆப்ஷன்களை WhatsApp டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது என்று தெரிகிறது. வாட்ஸ்அப் ஃபார்வர்டு செய்யப்பட்ட வாய்ஸ் மெசேஜை வேகமாக கேட்பதற்காக ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்யும் ஆப்ஷனை தருகிறது. வாய்ஸ் நோட்களை 7 2X வரை வேகப்படுத்தலாம் என்று தெரிகிறது.