வாட்ஸ்அப்பில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை அதன் ஒட்டுமொத்த பயனர்களின் ஒரு பகுதியினரால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்போது, இந்த பேமெண்ட் அம்சத்தில் ​​ஒரு புதிய சேவையை நிறுவனம் இப்போது சோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த சேவையைச் சோதனை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் அடுத்து வரவிற்கும் எதிர்கால அப்டேட்டில் கேஷ்பேக் அம்சத்துடன் வேலை செய்யும் என்பதை வெளிப்படுத்துகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் இனி பணப்பரிமாற்றத்திற்கு என்று தனியாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.



வாட்ஸ்அப் தொடர்பான செய்திகள், அப்டேட்டுகளை பற்றி லீக் செய்யும் பிரபல லீக்கரான WABetaInfo இன் அறிக்கை படி, வாட்ஸ்அப் சோதனை செய்யும் கேஷ்பேக் சேவையானது இந்தியப் பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட்டை உபயோகிக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கேஷ்பேக் கட்டண அம்சத்தை சேர்க்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பீட்டா சேவையில் இருக்கும் பயனர்களால் கூட இப்போது இந்த சேவையை அணுக முடியாது, இப்போதுதான் இது பணியில் இருக்கின்றது, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும். இது குறித்த விவரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், லீக்கர் ஒரு புதிய பேனரின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் வாட்ஸ்அப்பில் ரிவார்டு ஐகான் உடன் "Get cashback on your next payment" மற்றும் "Tap to get started" என்ற விருப்பங்கள் இருப்பதை காண்பிக்கிறது.



லீக்கரின் கூற்றுப்படி, கேஷ்பேக் அம்சம் இந்தியாவின் UPI அக்கவுண்ட்களுக்கு மட்டுமே இருக்கும், மேலும் பயனர்கள் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10 கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கேஷ்பேக் அம்சம் தற்போதுள்ள வாட்ஸ்அப் பேமெண்ட் பயனர்களுக்கும் சேர்த்து வழங்கப்படுமா அல்லது முதல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் நிறுவனத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. இந்த திட்டம் வாட்ஸ்அப் நிறுவனம் மூலம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. எதிர்கால அப்டேட்டில் இந்த அம்சம் வெளியிடப்படும் போது இந்த அம்சம் தொடர்பான கூடுதல் தகவல்களை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். கூகிள் நிறுவனத்தின் Gpay மற்றும் phonepe யுபிஐ ஆப்ஸ்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் இருக்கும் நிறுவனமாக paytm திகழ்கிறது. கேஷ் பேக் ரிவார்டு அம்சத்தை அறிமுகம் செய்து அதிக பயனர்கள் தன் வசம் ஈர்த்ததை போல், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வைத்து பயனர்களை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.