மொபைல் எண் சேமிக்கப்படாத பயனாளர்களுடன் கலந்துரையாடுவதை எளிமைப்படுத்தும் விதமாக, வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.


ஃபேஸ்புக், இன்ஸ்டா பாணியில் வாட்ஸ்-அப்:


மிகவும் எளிமையான மற்றும் பயனாளர்களால் நிண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் ஒன்றை, மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, மொபைலில் சேமிக்கப்படாத எண்களில் உள்ள, வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு கூட சக பயனர் குறுந்தகவலை அனுப்ப முடியும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பயனாளர்களுக்கு இந்த புதிய அப்டேட் தற்போது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, யாரேனும் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இந்த புதிய அப்டேட்டால் அந்த நிலை மாறியுள்ளது.   


பயன்படுத்துவது எப்படி?


ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் நியூ சாட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்து மேலே உள்ள சர்ச் பெட்டியை தொட்டு, தொடர்புகொள்ள வேண்டிய நபரின் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த எண்ணில் வாட்ஸ்-அப் கணக்கு இருந்தால், அதனை பயனாளர் காணலாம். தொடர்ந்து, எளிமையாக அவருக்கு குறுந்தகவல் அனுப்பி, கலந்துரையாடலாம். அதாவது, ஏற்கனவே எப்படி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பயனாளர் ஐடியை கொண்டு அவரை அடையாளம் காணுவோமோ, அதேபோன்று இனி வாட்ஸ்-அப் செயலியில் பயனாளரின் எண்ணை பதிவிட்டு தேடி நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பலாம். ஐஓஎஸ் பயனாளர்களும் மேலே குறிப்பிட்ட அதே முறையை பின்பற்றி, மொபைலில் சேமிக்கப்படாத எண்ணில் உள்ள வாட்ஸ்-அப் பயனாளருடன் கலந்துரையாடலாம்.


வாட்ஸ் ஆப்


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன.


அண்மையில் வந்த அப்டேட்:


அந்த வகையில் அண்மையில், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது வாட்ஸ் ஆப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பரை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம். இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும்போது உங்களது மொபைல் நம்பரானது குரூப் அட்மின் மற்றும் உங்கள் மொபைலில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காட்டும். மொபையில் பதிவு செய்யப்படாத  நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்டப்படாது.