மெட்டா குழுமம் வாட்ஸ்-அப் செயலியில் அடுத்த அதிரடியாக பயனாளர்களுக்கு ”சேனல்ஸ்” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குவியும் அப்டேட்கள்:
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்-அப் செயலியிலேயே செய்திகளை அறிவது போன்ற அம்சங்களுக்காக புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
”சேனல்ஸ்” அப்டேட்:
தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என வாட்ஸ்-அப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அப்டேட்ஸ் எனும் ஒரு புதிய டேப் வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடனான சாட்களில் இருந்து தனித்தனியாக அவர்கள் பின்பற்ற விரும்பும் ஸ்டேட்ஸ் மற்றும் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கம் என்ன?
சேனல்கள் என்பது உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம். சாட், இமெயில் மற்றும் ஆன்லைன் பதிவுகளில் இருந்து கிடைக்கப்பெறும், இணைய முகவரிகள் மூலமாகவும் பயனர்கள் செய்திகளை அறியலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்:
நிர்வாகிகள் மற்றும் ஃபாலோவர்களின் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க, சேனல் நிர்வாகி மற்றும் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரப் புகைப்படம் ஃபாலோவர்களுக்கு காட்டப்படாது, அதேபோல, அட்மின் மற்றும் பிற பயனாளிகளுக்கு தனிநபர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் சேனல் ஹிஸ்டரியை 30 நாட்கள் வரை தங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கும் என்றும், பின்தொடர்பவர்களின் சாதனங்களில் இருந்து இன்னும் வேகமாக அப்டேட்கள் அழிந்துவிடுவதற்கான வழிகளைச் சேர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிர்வாகிகள் தங்கள் சேனல்களில் இருந்து ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஃபார்வர்டுகளைத் தடுக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகப்பயன்பாடு:
சேனல்களின் நோக்கம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதே என்பதால், சேனல்கள் இயல்பாகவே என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படாது. புதிய அப்டேட்டின் மூலம், விரிவடைந்து வரும் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தி, சில சேனல்களை விளம்பரப்படுத்தும் திறனைப் பயன்படுத்தி, அவர்களின் சேனலைச் சுற்றி வணிகத்தை உருவாக்க முடியும் எனவும் வாட்ஸ்-அப் செயலி நிறுவனம் நம்புகிறது.