பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப். இந்நிலையில் தற்போது குரூப் அட்மினுக்கு உரிய பவரைக் கொடுத்து அப்டேட் கொண்டுவரவுள்ளது வாட்ஸ் அப்.
டெலிட் செய்யலாம்..
வாட்ஸ் அப் தொடர்பான அப்டேட் சோதனைகளை வெளியிடும் WABetaInfoன் தகவலின்படி வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் இனி குரூப்பில் பதிவிடப்படும் எந்த ஒரு மெசேஜையும் டெலிட் செய்ய முடியும். குறிப்பிட்ட குரூப்பில் யார் மெசேஜ் செய்திருந்தாலும் அதனை லாங் ப்ரஸ் செய்து குரூப் அட்மின் டெலிட் செய்யலாம். குரூப்பில் தேவையற்ற விவாத பேச்சுகளை தவிர்க்கும் விதத்தில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் மெசேஜை டெலிட் செய்யும் காலவரம்பை 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரம் வரை நீட்டித்தது வாட்ஸ் அப்.
online..
தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும்.இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது. ஆன்லைனைப் பார்த்து நமக்கு சாட் செய்வார்கள். அந்த சிக்கலை சரிசெய்ய தற்போது அப்டேட் கொண்டு வருகிறது வாட்ஸ் அப். அதன்படி ஆன்லைன் என்பதை சிலருக்கோ அல்லது யாருக்குமே காட்டாமல் இருக்கலாம் என்றும் அந்த அப்டேட்டுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
அதேபோல நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை வேண்டுமானால் தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் மட்டுமே செய்ய முடியும். அதில் ஒரு அப்டேட்டாக, அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியும் விரைவில் வரும் எனத் தெரிகிறது. இதெல்லாம் தற்போது சோதனை முறையில் இருப்பதால் விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட்டு அது வரவேற்பை பெற்றால்தான் அனைவருக்கும் கிடைக்கும்.