வாட்சாப்பில் நீங்கள் அனுப்பும் ஆடியோ மெசேஜ்களை அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை கேட்ட பிறகு அனுப்ப வேண்டும் எனத் தோன்றுகிறதோ? உங்களுக்கு உதவுவதற்காக புதிய சிறப்பம்சம் ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது வாட்சாப் நிறுவனம். உங்கள் ஆடியோ பதிவுகளைப் பிறருக்குப் பகிர்வதற்கு முன்பே, அதன் முன்னோட்டத்தைக் கேட்பதற்கான சிறப்பம்சம் தற்போது வாட்சாப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பம்சத்தின் மூலம் நீங்கள் அனுப்பும் ஆடியோ மெசேஜ் பிறருக்குப் புரியாமல் போனாலோ, ஏதேனும் அதில் திருத்தம் தேவைப்பட்டாலோ, அதனை மாற்றிக் கொள்ள முடியும். மேலும், உங்கள் ஆடியோ சரிவர கேட்கிறதா என்றும் இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
வாட்சாப் நிறுவனம் புதிதாக இந்த ஆடியோ மெசேஜ் முன்னோட்டத்தை ஆண்ட்ராய்ட், ஐ ஓஎஸ் பயனாளர்கள் அனைவருக்கும் பயன்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்சாப் செயலியில் நீங்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவதற்கு முன்பு, முன்னோட்டமாகப் பார்வையிடுவதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
வாட்சாப் ஆடியோ மெசேஜை அனுப்புவதற்கு முன்பு, அதனைக் கேட்பது எப்படி?
இந்தப் புதிய சிறப்பம்சத்தைப் பயன்படுத்தும் முன், உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் வாட்சாப் செயலின் சமீபத்திய வெர்சன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளவும்.
1. வாட்சாப் செயலியில் ஒரு தனி நபரின் சாட்டையோ, ஒரு குழுவின் சாட்டையோ திறந்து கொள்ளவும்.
2. கொடுக்கப்பட்டுள்ள மைக் பட்டனை அழுத்திப் பிடித்து, அதனைப் பக்கவாட்டில் நகர்த்தினால் எளிதால ஆடியோ பதிவு செய்ய முடியும். கணினியில் பயன்படுத்துபவர்கள் நேரடியாக ஆடியோ பதிவு செய்யலாம்.
3. இப்போது உங்கள் மெசேஜைக் குரல் வழிப் பதிவாக மேற்கொள்ளவும்.
4. பேசி முடித்த பிறகு, `ஸ்டாப்’ பட்டனை அழுத்தி முடித்துக் கொள்ளவும்.
5. இப்போது `Play' பட்டனை அழுத்தி உங்கள் குரல் பதிவைக் கேட்கலாம். மேலும், அதில் உள்ள பகுதிகளை வெட்டவும், திருத்தவும் செய்யக்கூடிய வசதியும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் மெசேஜ் சரியானதாக இருந்தால், அதனைப் பகிரலாம் என நீங்கள் உறுதி செய்த பிறகு, Send பட்டனை அழுத்தி பிறருக்குப் பகிரலாம். உங்கள் மெசேஜ் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், அதில் காட்டப்படும் குப்பைத் தொட்டி ஆப்ஷனைப் பயன்படுத்தி, உங்கள் மெசேஜை அழிக்கலாம். மீண்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முதலில் இருந்து பின்பற்றி, சரியான ஆடியோ மெசேஜைப் பிறருடன் பகிரலாம்.