உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அதிருப்தியடைந்தனர். 


தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் இருந்த இடத்தில் இருந்தே உலகம் முழுவதிலுமான மக்கள் தொடர்பு கொள்வதற்கென பல தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டது. அதில் பிற செயலிகளை காட்டிலும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயனாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு மகிழ்விப்பது வழக்கம். அதேசமயம் கடந்த சில மாதங்களாகவே இந்த செயலிகள் அவ்வப்போது முடங்குவது தொடர்கதையாகி வருகிறது. 


அந்த வகையில் நேற்று இரவு திடீரென இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகள் முடங்கியது. இரவு 11.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் என்ன நடந்தது என தெரியாமல் சிரமப்பட்டனர். செயலியின் உள்ளே நுழையும் போது இணைய சேவை கிடைக்கவில்லை, சர்வர் கனெக்ட் ஆகவில்லை என காரணங்கள் காட்டப்பட்டதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பயனாளர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியது தொடர்பாக புகாரளித்துள்ளனர். 


இந்தியாவில் 20 ஆயிரம் பேரும், இங்கிலாந்து 46 ஆயிரம் பேரும், பிரேசிலில் 42 ஆயிரம் பேரும் புகார் தெரிவித்துளனர். இதனிடையே மெட்டா நிறுவனம் செயலியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்த சில மணி நேரங்களில் சரி செய்தது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த செயலிகள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.