தனுஷ் , நயந்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன.


யாரடி நீ மோகினி




செல்வராகவன் கதை திரைக்கதை எழுதி மித்ரன் ஆர். ஜவகர் இயக்கிய படம் யாரடி நீ மோகினி. தனுஷ், நயன்தாரா, ரகுவரன் கார்த்திக் குமார், கருணாஸ், கே விஸ்வநாத், மனோபாலா , சரண்யா மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


ஒன் சைட் காதலும் மிடில் கிளாஸ் நாயகனும்




மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எல்லா காலமும் ஒரே மாதிரியான  பிரச்சனைகள் தான். படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் இருப்பது. வீட்டில் அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஒன் சைடாக ஒரு பெண்ணை பார்த்த நொடியில் காதலில் விழுவது, அந்த பெண்ணிற்காக வாழ்க்கையின் முன்னுக்கு வர நினைப்பது. இதே கதையை வெவ்வேறு மாதிரி நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதே இயக்குநர் இயக்கி சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திருச்சிற்றம்பலம் வரை. 


 


மிடில் கிளாஸ் என்கிற வர்க்கம் இருக்கும் வரை இந்த கதை இன்னும் ஆயிரம் முறை திருப்பி சொல்லப்படும். சலிப்பான இந்த வாழ்க்கை ஓட்டத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக காட்டிவிட மாட்டார்களா என்கிற ஏக்கத்தில் நாம் இந்தப் படங்களை பார்க்கதான் போகிறோம். இந்த படத்தைப் பார்க்கும் இரண்டரை மணி நேரம் என்பது பார்வையாளர்களுக்கு எதார்த்த உலகத்தை மறந்து தங்களது வாழ்க்கையை கொஞ்சம் மிகையான கற்பனையுடன் சேர்ந்து பார்க்கும் ஒரு ஆசுவாசம். 


இப்படியான படங்களில் உணர்ச்சிகள் எவ்வளவு கச்சிதமாகவும் அழுத்தமாகவும் கையாளப் படுகின்றன என்பது தான் முக்கியம். அப்படி கச்சிதமான மீட்டரில் காதல் , நகைச்சுவை, செண்டிமெண்ட் என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு அனுபவமாக கொடுக்கப்பட்ட படம் தான் யாரடி நீ மோகினி.


படத்தின் பிளஸ்




செல்வராகவனின் எழுத்து இப்படத்தின் மிகப்பெரிய பலம். ஆரம்ப காட்சியில் தனுஷ் மற்றும்  ரகுவரனுக்கு இடையில் இருக்கும் வெளிப்படையான மோதல் (தந்தையும் மகனும்  டி ரிமோட்டிற்காக அடித்துக்கொள்ளத் துவங்கி எதிரிகள் போல் இரு துருவங்களில் நிற்கும் முதல் காட்சி), இரண்டு ஆண்களால் அன்பை வெளிப்படையாக பேசிக்கொள்ள முடியாத நெருடல், அப்படி பேச நினைக்கும்போது ஏற்படும் அசட்டுத்தனமான நகைச்சுவை வேல கிடைச்ச உடனே குண்டில கொழுப்பு ஏறுச்சுல உனக்கு டயலாக்) இது எல்லாவற்றும் பின் ஓடும் மெல்லிய சோகம் என தந்தை மகனுக்கு இடையில் இத்தனை பரினாமங்களை பேசிய வெகுஜன படங்கள் மிக குறைவு)


 


மறுபக்கம் நாயகன் வாசுவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் அவனது நெருங்கிய நணர்கள். இன்று இப்படியான ஒரு நட்பை காட்ட வேண்டும் என்றால் இவர்கள் மூவரும் சின்ன வயதில் இருந்து எவ்வளவு க்ளோஸ் தெரியுமா என்று ஒரு காட்சியை தனியாக வைத்து காட்டுவார்கள். ஆனால் எந்த வித பிளாஷ்பேக் இல்லாமல் இவர்கள் மூவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.


யுவனின் மேஜிக்


நாயகியை பார்த்த தருணத்திலேயே காதல் கொள்வது எல்லாம் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் அந்த தருணத்தை நம்பவைக்க ஏதோ ஒரு சின்ன மேஜிக் செய்ய வேண்டும் அந்த மேஜிக்கை தான் யுவன் ஷங்கர் ராஜா பின் இருந்து செய்துகொண்டே இருப்பார். 'எங்கேயோ பார்த்த மயக்கம்' என்று பாடல் தொடங்கி இவளைப் பார்த்த இன்பம்  போதும் வாழ்ந்து ஆர்க்க நெஞ்சம் ஏங்கும் என்று உதித் நரேன் பாடுவதிலேயே இவள் தான் இவனுக்கு அதற்காக அவன் என்ன கிருக்கு தனங்களை செய்தாலும் நம்பிவிடலாம் என்று ஆடியன்ஸ் கன்வின்ஸ் ஆகிவிடுவார்கள்.


 


ஆக்‌ஷன் காட்சிகளின் வழியாகதான் ஹீரோவின் மாஸை காட்ட வேண்டும் என்றில்லை. அதிலும் ஆக்‌ஷன் இல்லாமல் செல்வராகவன் மாஸ் காட்டுவதில் வல்லவர். காதல் கொண்டேன் படத்தில் முகத்யில்  சாக் பீஸ் புழுதியுடன் போர்டில் சென்று ஒரு கணக்கை அசால்ட்டாக தனுஷ் போட்டுவிட்டு வருவது ஒரு மாஸ் இல்லையா. அதே போல் காதலிக்கும் பெண் அழுதால் என்பதற்காக ஒரே இரவில் தனுஷ்  காப்பியுடன் கோடிங்கை கரைத்து குடிப்பதும் ஒரு மாஸ் தான். பின்னிருந்து யுவன் மேஜிக் செய்வார் அவ்வளவுதான்.


செல்வராகவன் டச்


காதல், நட்பு , அப்பா என்று சென்றுகொண்டிருக்கும் படத்தை இரண்டரை மணிநேரம் தாக்குபிடிக்க முடியாது என்று தெரிந்து இரண்டாம் பாதியில் மொத்த செட் அப்பை மாற்றி நகரத்தில் இருந்து கிராமத்திற்கு எடுத்து செல்கிறார்கள். பழைய கதாபாத்திரங்கள் போய் கோமளவள்ளி, பூஜா என்கிற ஆனந்தவள்ளி என்கிற புதுகதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள்.முதல் பாதியில் காதலிக்கும் பெண்ணின் மனதை கவர நினைக்கும் நாயகன் இப்போது ஒரு குடும்பத்தின் மனதை கவர்கிறார். எல்லாம் கடந்து கடைசியில் கிளைமேக்ஸில்  செல்வராகவனின் கிளாசிக் டச்சாக வருகிறது முப்பரிமாணக் காதல். 


எது நல்ல படம்


கமல் சொல்வது போல் வீரம் என்றால்  பயப்படாமல் இருப்பது இல்லை. பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பது. அதே போல் ஒரு நல்ல கமர்ஷியல் படம் என்பது லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த லாஜிக் ஓட்டைகள் தெரியாதபடி ஒரு திரைக்கதை அமைப்பது. அதை இப்படத்தில் திரைக்கதையிலும் படத்தொகுப்பிலும் சிறப்பாகவே செய்திருபார்கள். 16 ஆண்டுகள் கடந்துள்ள யாரடி நீ மோகினி எப்போதும் ரசிகர்களில் மனம் கவர்ந்த படங்களில் ஒன்றாக இருக்கும். மிடில் கிளாஸ் காதல் வாழ்க !