Whatsapp Feature: வாட்ஸ் அப் அக்கவுண்டை லாக்கின் செய்வதற்கு Passkeys என்ற ஒரு புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வசதி:
அதாவது, வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை லாக்கின் செய்வதற்கு ’Passkeys' என்ற ஒரு புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. முன்னதாக, வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை லாக்கின் செய்யும்போது, எண்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதனை சரிபார்க்க மெசேஜ் ஒன்று வரும். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அறிமுகமாக உள்ள ’Passkeys’ ஆப்ஷன், போன் நம்பர் சரி பார்ப்புக்கு மெசேஜ் வராது. அதற்கு பதிலாக, பிங்கர் பிரிண்ட், ஃபேஸ் லாக், பின் நம்பர் மூலமாக வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை லாகின் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஆண்டிராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த 'Passkeys' என்ற ஆப்ஷனை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது.
எப்படி செயல்படுத்துவது?
முதலில் வாட்ஸ் அப்பில் இருக்கும் Setting ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அங்கு Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Passkeys ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் Create a passkey ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் விருப்பதிக்கேற்ப பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ளலாம். அதாவது, பிங்கர் பிரிண்ட், ஃபேஸ் லாக், பின் நம்பர் என்பதை தேர்வு செய்து நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வந்த வசதி:
சமீபத்தில் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம்.