உலகிலேயே அதிகமானோரால் மெசேஜ் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் செயலியாக மாறியிருக்கிறது வாட்சப். இந்த செயலியின் மூலமாகப் பல்வேறு பயன்களைப் பெறலாம். வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதனால் இது உலகம் முழுவதும் கிடைக்கிறது. எத்தனை சலுகைகளை அளித்தாலும், ஒரு சில செயலிகளைப் பயன்படுத்தினால், வாட்சப் அக்கவுண்ட் தடை செய்யப்படும் என கறார் முடிவுகளையும் எடுத்திருக்கிறது வாட்சப் நிறுவனத்தின் உயர்மட்டக் குழு.
வாட்சப் செயலி தனது பயன்பாட்டாளர்களுக்குப் புதிது புதிதான அம்சங்களை அளிப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எனினும், வாட்சப் செயலி அளிக்காத வசதிகளை, அதனது போட்டியாக விளங்கும் மற்ற செயலி நிறுவனங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றன. பல்வேறு செயலிகள் வாட்சப்பில் இல்லாத அம்சங்களான தானாக ரிப்ளை அளிக்கும் வசதி, சாட்களை நேரம் அடிப்படையில் அட்டவணைப்படுத்தும் வசதி முதலானவற்றை வழங்கி வருகின்றன.
இன்னும் சில செயலிகள், வாட்சப் செயலியை அப்படியே அச்சுப் பிசகாமல் காப்பியடித்து, அதிகாரப்பூர்வமற்ற வாட்சப் வடிவங்களைப் பரப்பி வருகின்றன. இதில் வாட்சப் சாட் அப்படியே இருக்கும், எனினும் வாட்சப்பில் இல்லாத சில அம்சங்களை இந்த செயலிகள் அதனைப் பயன்படுத்துவோருக்கு அளிக்கும். வாட்சப்பில் இல்லாத பல்வேறு அம்சங்கள் இதுபோன்ற செயலிகளில் கிடைப்பதால், பலரும் இந்த செயலிகளுக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்தி வருகின்றனர். ‘வாட்சப் ப்ளஸ்’ என்ற பெயரில் கிடைக்கும் இதுபோன்ற செயலி ஒன்று இதற்கான உதாரணம்.
வாட்சப் பயன்படுத்துவோர் தங்கள் வாட்சாப்பில் இதுபோன்ற அம்சங்களை விரும்புகின்றனர். எனினும், பல்வேறு சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, ஒவ்வொறு அம்சங்களையும் வெளியிடுவதால் வாட்சப் நிறுவனம் பின்தங்கி நிற்கிறது. பயன்படுத்துவோரும் புதிய அம்சங்களைத் தேடி, இந்த செயலிகளை நாடத் தொடங்குகின்றனர். இது தற்போது பிரச்னையை உருவாக்கியுள்ளது. வாட்சப் அக்கவுண்ட் உருவாக்கி, அதன் மூலம் இப்படியான போலி வாட்சப் செயலிகளைப் பயன்படுத்துவோரை நிரந்தரமாகத் தடை செய்யவுள்ளது வாட்சப். வாட்சப் ப்ளஸ் மட்டுமல்லாமல், GB WhatsApp என்ற பெயரில் கிடைக்கும் வாட்சப் வடிவத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் பலருக்கும் இதே எதிர்வினை தான் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற மூன்றாம் தர செயலிகளைப் பயன்படுத்துவதால், பயன்படுத்துவோரின் ஸ்மார்ட்போனுக்குள் அபாயகரமான மென்பொருள்கள் நுழைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் என்பதால், வாட்சப் தரப்பில் இருந்து இப்படியான கறார் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வமான தளங்களைப் பயன்படுத்தி டவுன்லோட் செய்யப்படும் செயலிகளே பாதுகாப்பானவை எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், வாட்சப் செயலியின் அதிகாரப்பூர்வ வடிவத்தைப் பயன்படுத்தும்போது, அது தனிநபர் அந்தரகத்தைப் பாதுகாக்கிறது. மற்ற செயலிகளில் இந்தப் பாதுகாப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.