வாட்சாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில் காத்கார்ட் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 வாட்சாப் வழங்கும் தனியுரிமையில் தலையிடுவதாகக் கூறியுள்ளார்.


சமீபத்தில் The Verge என்ற தொழில்நுட்ப இதழுக்குப் பேட்டியளித்துள்ள வில் காத்கார்ட், இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தால், வாட்சாப் வழங்கும் பாதுகாப்பான end-to-end encryption அம்சத்திற்குச் சிக்கல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். `இந்தச் சட்டத்தால் புதிய வடிவம் ஒன்றை உருவாக்குகிறது. உதாரணமாக, அரசுத் தரப்பில் யாராவது எங்களிடம் வந்து `XYZ' என்று பரப்பப்படும் செய்திகளில், முதன்முதலாக யார் `XYZ' என்று சொன்னார்கள் என்று கேட்டால் அது தனியுரிமையைப் பாதிக்கும் விவகாரம். இதனால் end-to-end encryption அம்சம் அளிக்கும் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது’ என்று வில் காத்கார்ட் கூறியுள்ளார். 


Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 என்று அழைக்கப்படும் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள வாட்சாப் நிறுவனம், பயனாளர்களின் தனியுரிமை என்பது தங்களின் டி.என்.ஏ எனவும், மெசேஜ் செயலிகளிடம் சாட்களைக் கண்காணிக்க உத்தரவிடுவது மக்களின் தனியுரிமையில் தலையிடும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.



கடந்த மே 26 அன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வாட்சாப் நிறுவனம், பயனாளர்களின் மெசேஜ்களைக் கண்காணிக்க உத்தரவிடுவது என்பது, வாட்சாப்பில் அனுப்பப்படும் ஒவ்வொரு மெசேஜின் கைரேகையையும் சோதிப்பதற்கு இணையானது எனவும் கூறியுள்ளது. 


வாட்சாப் நிறுவனத்தின் இந்தச் சட்ட நடவடிக்கை அரசியல் அடிப்படையிலானதா எனவும், இது இந்தியாவுக்கு மட்டும் பொருந்த கூடியதா எனவும் கேட்கப்பட்ட போது, வில் காத்கார்ட், `இதில் அரசியல் அம்சங்களும் இருக்கின்றன; தொழில்நுட்பக் காரணங்களும் இருக்கின்றன. அவர்கள் எழுதியிருக்கும் சட்டத்திலும், அவர்கள் கூற வருவதிலும், இந்தச் சட்டம் இந்தியாவில் வாழும் மக்களைக் கண்காணிப்பதற்கு மட்டும் என்பது தெரிகிறது. எனினும், இதன் பின்னணியில் பெரிய அரசியல் இருக்கிறது’ என்று பதிலளித்துள்ளார்.


`பல நாடுகள் இந்த வழிமுறையைப் பின்பற்றி, கண்காணிப்பைத் தொடங்கினால், வெவ்வேறு நாடுகளும் இதனைத் தொடர்ந்து செய்யத் தொடங்குவர்’ எனவும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் காத்கார்ட்.



வில் காத்கார்ட்


 


கடந்த வாரம் வெளியான தகவல் ஒன்றின்படி, இந்திய அரசு மெசேஜ்களின் தொடங்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதாகவும், வாட்சாப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் மாற்றங்களை ஏற்படுத்துமாறும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக அரசுப் பாதுகாப்பு நிறுவனங்கள் உதவி கேட்டால், மெசேஜ்கள் தொடங்கும் இடங்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்குமாறும் கூறியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. 


End-to-end encryption அம்சத்திற்கும், மெசேஜ்களின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ள இந்திய அரசு, `மெசேஜ்களின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம், நாட்டில் தேசப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்’ எனவும் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.