WhatsApp Update :விண்டோஸ்க்கான வாட்ஸ் அப் செயலியின் புதிய அம்சம் மூலம் 32 நபர்களுடன் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய அப்டேட்
அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஏற்கனவே 8 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி இருந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனம் அதனை விரிவுப்படுத்தி 32 பேருடன் வீடியோ பேசும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோன்று, தற்போது 32 பேருடன் ஆடியோ காலையும் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்:
விண்டோஸிற்கான டெஸ்க்டாப் வாட்ஸ்-அப் செயலி, மெட்டா நிறுவனத்தின் பிற பயன்பாடுகளைப் போன்றே அதாவது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல சாதனங்களில் செய்தி அனுப்புதல், மீடியா மற்றும் அழைப்புகளுக்கு வழங்கப்பட்டதை போன்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்தை பெற்றுள்ளது.
அண்மையில் வந்த அப்டேட்
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வந்த அப்டேட்டானது, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்-அப்பில் தாமாகவே சைலன்ஸில் போடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த, செட்டிங்ஸ் அம்சத்தில் பிரைவசிக்குள் சென்று கால்ஸ் எனும் பிரிவில் “silence unknown calls” என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம், அநாவசிய தொந்தரவுகளை பயனாளர்கள் தவிர்க்கலாம் என, மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்திருந்தார்.