பொறியியல் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 6 ஆம் இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற கரூர் மாணவர் ராஜேஷ் மேற்படிப்பிற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.


 




தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. கலந்தாய்வை மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 4-ந் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.


 




 


என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் வெளியிட்டார். 102 பேர் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா முதல் இடமும், தருமபுரியை சேர்ந்த ஹரிணி 2-வது இடமும் பிடித்தனர்.


கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே சடையம் பாளையம் பகுதியில் அண்ணாதுரை, மீனாட்சி தம்பதியினருக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் கீர்த்திகா பொறியியல் படிப்பு முடித்து இல்லத்தில் இருக்கிறார். இவரது தந்தை டெக்ஸ்டைலில் கூலி வேலை செய்து வருகிறார். ராஜேஷ்,ரஞ்சித் இருவரும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.  ராஜேஷ் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 6ஆம் இடம் பிடித்தார். இந்த நிலையில், தனது மேற்படிப்புகாக தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென மாணவர் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தரவரிசை பட்டியலில் 6-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தார்கள். தினமும் வீட்டில் 5 மணி நேரம் படிப்பேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, சாஃப்ட்வேர் என்ஜினியராக வேண்டும் என்பதே விருப்பம்” என்றார். மேலும், மேற்படிப்பு படிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை  விடுத்தார்.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.