உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தொலைதொடர்பு செயலியான வாட்ஸ்-அப், பிரபல மெட்டா நிறுவனத்தின்  கீழ் இயங்குகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதற்காக பயன்படுத்தப்படும் செயலிகளில், அதிக தரவிறக்கம் செய்யப்பட்டது என்ற பெருமையும்  வாட்ஸ்-அப் செயலியையே சேரும். குறுந்தகவலை மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸ்-அப் செயலி தற்போது பல மாற்றங்களையும், புதுப்புது வசதிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.


மத்திய அரசு நடவடிக்கை:


இந்நிலையில், இந்திய அரசாங்கத்தின்  தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சமூகவலைதளங்கள் மூலம் நடைபெறும் தவறுகளை தவிர்க்க, சமூகவலைதள நிறுவனங்கள் அனைத்தும், மாதந்தோறும் பயனாளர்களிடம் இருந்து பெறப்படும் புகர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து,  மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


அந்த வகையில், விதிகளை மீறும் வாட்ஸ் அப் கணக்குகளை, பாதுகாப்பு நெறிமுகளுக்காக என சுட்டிக்காட்டி அந்நிறுவனம் முடக்கி வருகிறது. வாட்ஸ் அப்பில் ‘ரிப்போர்ட்’ ஆப்ஷனைப் பயன்படுத்தி பயனாளர்கள் புகார் அளிக்கும் கணக்குகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து முடக்குகிறது.


முடக்கப்படும் வாட்ஸ் கணக்குகள்:


இதனால், கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் 1,52,24,000 கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. தனிநபர் உரிமையை மீறாமல் விதிமுறைகளை மீறும் கணக்குகளை மட்டும் தேர்வு செய்து வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலும்,  26 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்-அப் நிறுவனம் தடை செய்தது.






அக்டோபர் மாத அறிக்கையை சமர்பித்த வாட்ஸ்-அப் நிறுவனம்:


இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் தங்களுக்கு கிடைத்த புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, வாட்ஸ்-அப் நிறுவனம் மத்திய அரசிடம்  தாக்கல் செய்துள்ளது.  அதன்படி, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் மட்டும் 23,24,000 வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதில் 8,11,000 கணக்குகள் எவ்வித புகார்கள் வருவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதத்தில் சேவை குறைபாடு தொடர்பாக 701 புகார்கள் வந்ததாகவும், அதில் 34 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 550 புகார்கள் கணக்குகளை முடக்குவது தொடர்பானது எனவும், மற்றவை பாதுகாப்பு மற்றும் உதவி தொடர்பான புகார்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்-அப் செயலி மூலம்  தீங்கு விளைவிக்கும் நடத்தையைத் தடுப்பதற்கான கருவிகளை பயன்படுத்தி வருவதாகவும்,  தீங்கு விளைவித்த பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என நம்புவதால், அதில் கவனம் செலுத்துவதாகவும் வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.