நீங்கள் இறந்த பிறகு, உங்கள் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவுக்கு என்னவாகும் என வருத்தம் கொள்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென்று சிறப்பான அம்சம் ஒன்றை அளிக்கிறது கூகுள் நிறுவனம். ஜிமெயில், மேப்ஸ், கூகுள் தேடல், கூகுள் ஃபோட்டோஸ் ஆகியவற்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் கூகுள் அக்கவுண்டில் உங்களைப் பற்றியும், உங்கள் பழக்க வழக்கங்கள் பற்றியும் கூகுள் நிறுவனத்திடம் டேட்டா குவிந்து இருக்கும்.
சிலர் கூகுளில் தங்கள் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வேறு சிலர், கூகுள் ஃபோட்டோஸ் பயன்படுத்தி தங்கள் நினைவுகளைச் சேமித்து வருகின்றனர். கூகுள் டிரைவ் பயன்படுத்தி முக்கிய ஆவணங்களையும் பத்திரப்படுத்தும் வழக்கம் உண்டு. எனவே நீங்கள் இறக்க நேர்ந்தால், உங்கள் கூகுள் அக்கவுண்டின் டேட்டாவை என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பது அவசியம்.
உங்கள் கூகுள் டேட்டாவைப் பாதுகாப்பது எப்படி?
உங்கள் கூகுள் அக்கவுண்டை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்தால், அது செயல்படாமல் போகும். அப்போது கூகுள் நிறுவனம் உங்கள் அக்கவுண்ட் செயல்படாமல் இருப்பதால் உங்கள் டேட்டாவை எப்படி பயன்படுத்துவது என முடிவு செய்யும்.
கூகுள் நிறுவனம் உங்கள் டேட்டாவை நீங்கள் அதிகமாக நம்பும் ஒருவரிடம் அளிக்கும் ஆப்ஷனைத் தருகிறது. நீங்கள் நம்பும் அந்த மனிதர் உங்கள் கூகுள் அக்கவுண்ட் செயல்படாத போது, அதனை அழித்து விடும் ஆப்ஷனும் பெறுவார். கூகுள் நிறுவனம், `உங்கள் கூகுள் கணக்கைக் குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதனை இவ்வாறு செய்து கொள்ளலாம். எவ்வளவு காலம் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்’ எனக் கூறுகிறது.
இதில் அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். myaccount.google.com/inactive என்ற தளத்தில் சென்று இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
முதலில் உங்கள் அக்கவுண்ட் செயல்படாமல் இருக்கும் கால அளவு, ஈமெயில், ஃபோன் நம்பர் முதலான விவரங்களை அளிக்க வேண்டும்.
அதன்பிறகு, கூகுள் உங்களுக்கு 10 நபர்கள் வரை தேர்வு செய்யும் வாய்ப்பை அளிக்கும். உங்கள் கூகுள் அக்கவுண்ட் செயல்படாமல் போனால், நீங்கள் தேர்வு செய்யும் நபர்களுக்கு நோடிஃபிகேஷன் அளிக்கப்பட்டு, உங்கள் அக்கவுண்ட் டேட்டாவைத் தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், உங்கள் அக்கவுண்ட் செயல்படாமல் போன பிறகு, உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு வரும் மெசேஜ்களுக்கும் தானாக ரிப்ளை அனுப்பும் அம்சமும் உண்டு. என்ன ரிப்ளை செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
வேறு யாரும் உங்கள் கூகுள் டேட்டாவைப் பயன்படுத்தக் கூடாது என நீங்கள் நினைத்தால், யாரையும் தேர்வு செய்யாமல், உங்கள் அக்கவுண்ட் செயல்படாமல் போனவுடன் அதனை முழுவதுமாக அழித்துவிடும் வசதியும் உண்டு. அவ்வாறு நடந்தால், உங்கள் டேட்டாவை யாரும் பார்க்க முடியாது.
உங்கள் அக்கவுண்ட் டேட்டாவைப் பார்வையிட நீங்கள் தேர்வு செய்யும் நபர்களுக்கு எந்த டேட்டாவைப் பார்க்கலாம் என்பதையும் நீங்களே முடிவு செய்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்யும் நபருக்கு, உங்கள் அக்கவுண்ட் செயல்படாமல் போன அடுத்த 3 மாதங்களுக்குள் உங்கள் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை எடுத்துக் கொள்ள முடியும்.