தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வந்த த்ரிஷாவிற்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் வருவதில்லை என கூறப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்னும் மெஹா பட்ஜெட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்'  படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும்  முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு முன்னதாகவே 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'ராங்கி' உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா அவை வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.மேலும்  'ராம்'  என்னும்  ஒரு மலையாள படத்தினை மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் புதிதாக  வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகும் அந்த வெப் சீரிஸிற்கு பிருந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.






க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று  (அக்டோபர் 16) முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிருந்தா வெப் சீரிஸை , சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரை சூர்யா வாங்கலா இயக்க, ஆர்ட் கொல்லா, மற்றும் அண்ட் ஸ்டோரிஸ் 3 இணைந்து தயாரித்து வருகின்றனர். வெப் தொடருக்கு  சக்தி காந்த் கார்த்திக் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நடிகை த்ரிஷா “எங்களுக்காகவும் கொஞ்சம் வேண்டுதல் செய்யுங்கள் “ என தொடரில் தனது கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.






ஆரம்ப காலத்தின் விஜய் , அஜித், கமல், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா. பின்னர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் , பெண்களுக்கான ஸ்கோப் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்றாலும் , த்ரிஷாவின் நடிப்பு வெகுவாக கவரப்பட்டது. இந்நிலையில் அவர் முதன் முறையாக வெப் தொடரில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


வெப் தொடருக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுக்க மவுசு அதிகரித்துவிட்டது. திரையரங்கில் படம் பார்ப்பதை விட , ஒடிடி தளத்தில் படங்களை பார்க்க விரும்புவர்கள்தான் அதிகம் என ஒரு ஆய்வறிக்கை கூறுவதும் குறிப்பிடத்தக்கது.