டேட்டிங் ஆப்..
டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் புதுப்புது ஆப்கள் வெளியாகி வருகின்றன. எல்லாத்துக்கும் ஆப்தான் என செயலிகள்தான் தற்போது நம்மை ஆளத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஸ்மார்ட்போன் என்றாலே சோஷியல் மீடியா என்றாகிவிட்டது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என பல சோஷியல் மீடியாக்கள் டிஜிட்டல் மீடியா உலகில் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பது போல ஒவ்வொரு சோஷியல் மீடியாவும் ஒவ்வொரு மாதிரியானவை.இது மட்டுமின்றி இளசுகளிடம் தற்போது அதிகம் பிரபலமடைந்து வருவது டேட்டிங் ஆப்கள். எளிதாக நண்பர்களை கண்டுபிடிக்கவும், அவர்களிடம் நட்பு பாராட்டவும் இந்த ஆப்கள் உதவுகின்றன. Tinder, Bumble, Hinge போன்ற பல டேட்டிங் ஆப்கள் குவிந்து கிடக்கின்றன. பல டேட்டிங் ஆப்கள் பாதுகாப்பு இல்லாமல் சிக்கலில் சிக்க வைக்கும் கதைகளும் நடக்கின்றன.
ராயா..
இப்போது ட்ரெண்டிங்காக இணைய உலகை ஆக்கிரமித்து இருக்கும் டேட்டிங் ஆப் ராயா. Raya செயலியின் முக்கிய அம்சமே பாதுகாப்பு என்பதுதான். டேட்டிங் ஆப் என்றாலும் முழு பாதுகாப்புடன் இங்கு இயங்க முடியும் என உறுதி அளிக்கிறது ராயா. வேறு ஒருவர் கணக்குக்குச் சென்று நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுத்தாலே உங்கள் கணக்கு காணாமல் போய்விடும். அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட் இந்த ராயா.
உடனடியாக ராயாவில் ஒரு அக்கவுண்டை போட்டு வைப்போம் என யோசிக்கிறீர்களா? அப்படியானால் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். முதலில் ராயா ஆப் வேண்டுமென்றால் கையில் ஆப்பிள் ஐபோன் இருக்க வேண்டும். ஆமாம், இந்த ஆப் ஐபோன் பயனாளர்களுக்கு மட்டுமே. ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் ஓரம் போகலாம் என்கிறது ராயா.
காத்திருப்பு..
எலிட் மக்களை குறி வைத்தே இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன் இருந்தால் மட்டுமே போதாது, உங்கள் தகவல்களை எல்லாம் குறிபிட்டு முதலில் ராயா செயலியில் கணக்கை தொடங்க முன் பதிவு செய்ய வேண்டும். உங்கள் விவரங்களை எல்லாம் சரிபார்த்த பிறகு நீங்கள் ஒர்த்தா இல்லையா என அந்த செயலி உங்களை தேர்வு செய்யும். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த செயலிக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். வேண்டுமானால் நீங்களும் சென்று வரிசையில் நிற்கலாம். ஜான்வி கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்களும், சில பாலிவுட் பிரபலங்களும் கூட இந்த ராயாவில் இருக்கின்றனர். பலர் இந்த ஆப்பில் நண்பர்களாகி திருமணமும் செய்துள்ளார்களாம்.
குறிப்பாக இந்த ஆப்பில் வலம்வர வேண்டுமென்றால் மாதம் ரூ.600 பணமும் கொடுக்க வேண்டும். ராயா செயலி வேண்டுமா இல்லையா என்பதை இப்போது நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம்.