ஆன்லைன் பண பரிவர்த்தனை எனப்படும் UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எவ்வித பரிசீலனையும் அரசிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒராண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 43% ஆக இருந்துள்ளது. இது கடந்த் ஆண்டு நடைபெற்ற கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளைவிட மிகவும் அதிகமானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் 50% இந்தியர்கள் இன்னும் தங்களுடைய பணபரிவர்த்தனைகளுக்கு பணம் அளிக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதும் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த அளவுக்கு மக்களிடம் நெருங்கிய போன்பே, கூகுள் பே போன்ற யூபிஐக்கு இனி கட்டணம் வசூலிக்கலாமா என அரசு யோசிப்பதாகவும், அதற்காக மக்களிடையே கருத்து கேட்கும் நடவடிக்கையையும் ரிசர்வ் வங்கி தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. UPI சேவைகளுக்கு கட்டணமா என ஒரு பக்கம் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனை எனப்படும் UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எவ்வித பரிசீலனையும் அரசிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அசுர வளர்ச்சி:
டிஜிட்டல் பேமெண்ட் தளமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), ஏப்ரல் 2022ன் கணக்கின்படி 5.58 பில்லியன் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இது இண்டர்ஃபேஸ் தொடங்கப்பட்டதில் இருந்து அந்தப் பேமெண்ட் தளத்தின் மற்ற பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இது அதிகமானது என்று இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (என்பிசிஐ) தரவு தெரிவித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், பணம் செலுத்தும் தளம் ரூ.9.83 டிரில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்டுள்ளது.
மார்ச் 2022 இல் ரூ.9.6 டிரில்லியன் மதிப்புள்ள 5.4 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI பதிவு செய்துள்ளது. ஒரு மாத அடிப்படையில், UPI பரிவர்த்தனைகளின் அளவு 3.33 சதவீத உயர்வையும், பரிவர்த்தனைகளின் மதிப்பில் 2.36 சதவிகித அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு ஆண்டு பரிவர்த்தனை அடிப்படையில், பரிவர்த்தனைகளின் அளவு 111 சதவிகிதம் உயர்ந்தது மற்றும் பரிவர்த்தனைகளின் மதிப்பும் 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2021ல் ரூ.4.93 டிரில்லியன் மதிப்புள்ள 2.64 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI செயல்படுத்தியுள்ளது.
2016ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, UPI பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இது கொரோனா தொற்றுநோயால் தூண்டப்பட்டது. 2021-22 நிதியாண்டில் UPI பரிவர்த்தனை மதிப்புகளில் அமெரிக்க டாலர் ஒரு ட்ரில்லியன் மதிப்பை கடந்துள்ளது. பணம் செலுத்தும் முறையின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது.
UPI, RuPay, Bharat Bill Pay போன்றவற்றைக் கையாளும் தாய் நிறுவனமான தேசிய பேமெண்ட் கழகம், அடுத்த 2-3 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு அமெரிக்க டாலர் 1 பில்லியன் மதிப்பிலான UPI பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டுள்ளது.