டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் மீதான வழக்கு குறித்த விசாரணையில் மத்திய அரசு வாட்சாப் முதலான செயலிகளைக் கண்காணிப்பதன் மூலம், மெசேஜ் அனுப்பிய முதல் நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்குச் சட்டம், அரசுக்கு இடமளிப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பான இணையவெளியை உருவாக்குவதற்காகவும், சட்டவிரோத தகவல்கள் பரப்புவதைத் தடுப்பதற்காகவும் வாட்சாப் முதலான நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 87வது பிரிவின்படி, சமூக வலைத்தள நிறுவனங்களிடம் ஒரு தகவலைப் பரப்பும் முதல் நபர் குறித்த விவரங்களை சட்டபூர்வமான அரசின் நலன் என்ற அடிப்படையிலும், போலிச் செய்திகளைத் தடுப்பது, தேசிய பாதுகாப்புக்கும் சட்ட ஒழுங்கிற்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பது முதலான காரணங்களுக்காகப் பெறும் அதிகாரம் அரசிடம் உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பயனாளர்களின் தனித் தகவல்களை வெளியிட முடியாது என்று கூறியுள்ள வாட்சாப் நிறுவனம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்தச் சமூக வலைத்தளங்கள் பயனாளர்களின் விவரங்களை வர்த்தகக் காரணங்களுக்காகப் பயன்படுத்துவதால், பயனாளர்களின் தனி விவரங்களைப் பாதுகாப்பதாகச் சட்டப்பூர்வமாக வாதிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 



`மனுதாரர்களான வாட்சாப், பேஸ்புக் ஆகிய மிகப்பெரிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் வாழும் மனிதர்களின் தகவல்களை வைத்திருப்பதோடு, அவற்றை வைத்து பணம் ஈட்டுகின்றன. எனவே இந்த நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தும் மக்களின் சார்பில் பிரதிநிதிகளாக இருந்து வாதிட முடியாது’ எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


`வாட்சாப் செயலி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதவுடன் அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளோடு பகிர்ந்து, அந்தத் தகவல்கள் வர்த்தகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பல்வேறு நாடுகளில் பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காகவும், அதன் டேட்டா மேலாண்மைத் திட்டங்களுக்காகவும் அது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது’ என்றும் மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது. 


நாட்டின் சட்டங்களை மீறி, தொழில்நுட்பக் குறைபாடுகளைக் காரணமாகக் காட்டி அரசுடன் ஒத்துப்போகாமல் இருப்பதை ஏற்க முடியாது என்றூ கூறியுள்ள மத்திய அரசு, encryption அம்சத்தை நீக்காமல் தகவல் அனுப்பிய முதல் நபரைக் கண்டுபிடிக்க முடியாது என்றால், நாட்டு மக்களின் நலனுக்காக அதனை சரிசெய்ய வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளது மத்திய அரசு. 


மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் `சமூக வலைத்தள நிறுவனங்களால் அவற்றின் மூலம் நிகழும் குற்றங்களைத் தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாது என்றால் அது உருவாக்கப்பட்டிருக்கும் முறையிலேயே அடிப்படையான பிரச்னை இருக்கிறது என்று பொருள். எனவே இந்த அடிப்படையைச் சரிசெய்ய வேண்டும். தொழில்நுட்பக் குறைபாடுகளைக் காட்டி, மண்ணின் சட்டத்தை மீறுவதையோ, சட்டத்தை மாற்ற முயற்சி செய்வதையோ ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றும் கூறப்பட்டுள்ளது. 



கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேல் வாட்சாப் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் கோரியிருந்தார். வாட்சாப் நிறுவனத்தை நடத்தும் பேஸ்புக் நிறுவனமும் இந்தச் சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தது. 


`வாட்சாப் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் மத்திய அரசு கேட்கும் தகவல்களை அளிக்க வேண்டுமெனில் end-to-end encryption என்ற சிறப்பம்சத்தை நீக்க வேண்டிவரும் என்றும், அது மக்களின் தனியுரிமைக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்று கூறியிருந்தது. மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என இதுகுறித்து கூறியிருந்தது. 


மேலும், தகவலை அனுப்பிய முதல் நபர் குறித்த விவரங்கள் பெரிய குற்றங்களில் மட்டுமே பெறப்படும் எனவும், அனைத்து மக்களையும் குறிவைக்கும் நடவடிக்கையாக இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் அமல்படுத்தாவிட்டால், போலியான மெசேஜ்கள் பரப்பப்பட்டு, அவை சமூக சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.