அரசுடன் ஒத்துழைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். ஒருவாரத்தில் பதில் சொல்கிறோம் என மத்திய அரசுக்கு ட்விட்டர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

புதிய விதிகளை பின்பற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்த நிலையில் ட்விட்டர் இவ்வாறு கடிதம் அனுப்பியிருக்கிறது.



 

4 கெடுபிடிகள்..

மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகளை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது.  

1. சமூக ஊடக நிறுவனங்கள் அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

2. புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். 

3. சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

4. சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.

மேற்கூரிய, புதிய ஐடி விதிகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து சமூக வலைதள ஊடகங்களுக்கும் மத்திய அரசு கெடு விதித்தது. 

ஆனால், ஆரம்பநிலையில் இதை ஏற்க மறுத்து ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசோ, புதிய ஐடி விதிகளை ஏற்க மறுத்தால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தது. 

மேலும், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. இதுதொடர்பாக கடந்த 5ம் தேதி நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அதில், ட்விட்டர் பரிந்துரைத்துள்ள குறை தீர்க்கும் அதிகாரி இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர் அல்ல. ட்விட்டர் குறிப்பிட்டுள்ளபடி ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலக முகவரி, உண்மையில் இந்தியாவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தின் முகவரி. இது விதிகளுக்கு புறம்பானது என மத்திய அரசு கடும் கண்டனங்களை முன்வைத்திருந்தது.



 

ட்விட்டரின் பதில்..

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள ட்விட்டர் நிறுவனம். "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிரோம். நாங்கள் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒத்துழைப்பு நல்க முயற்சித்து வருகிறோம். சிறப்பு தொடா்பு அதிகாரி மற்றும் உள்நாட்டு குறைதீா் அதிகாரியை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமித்துள்ளோம். அந்த பொறுப்புகளுக்கான நிரந்தர நியமனம் மேற்கொள்ளப்படும். பெருந்தொற்று காலமென்பதால் சில நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை இன்னும் ஒரு வாரத்தில் அரசுக்குத் தெரிவிக்கிறோம். இந்தியாவில் தொடர்ந்து மக்களுக்கான பொது ஊடகமாக செயல்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.


டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கு இடையே இருந்து வந்த கருத்து யுத்தம் இந்த கடிதம் மூலம் ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதை ட்விட்டர் விரும்பவில்லை. அதன் காரணமாகவே இந்த நடவடிக்கைக்கு ட்விட்டர் இறங்கியுள்ளது.