ட்விட்டர் யூஸர்கள் இனி தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களில் ட்விட்டர் ஸ்பேஸ் கிளிப்களைப் பகிரலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ்களுக்கான புதிய கிளிப்பிங் கருவியை சோதிக்கத் தொடங்குவதாகக் கூறியிருந்தது. இப்போது, இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள ட்விட்டர் ,"கிளிப்பிங் கருவி தொடர்பான சோதனை நன்றாக முடிந்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெப்பில் உள்ள அனைவருக்கும் கிளிப்பிங்கை வெளியிடுகிறோம்!" என ட்வீட் செய்துள்ளது.
தற்போது, ட்விட்டர் இணைய பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கவில்லை. இருப்பினும், விரைவில் அது தரப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
டிவிட்டர் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மற்றவர்களுடன் பகிர இந்த அம்சத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஸ்பேஸிலிருந்து பயனர்கள் இப்போது 30 வினாடிகள் கொண்ட ஆடியோவை உருவாக்க முடியும்.
முன்னதாக, பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் சமீப காலமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய போதிலிருந்தே ஒரு நிலைத்தன்மையின்மை நிலவுகிறது. ஏற்கனவே அதன் வருவாய் 1.18 பில்லியன் டாலராக குறைந்த நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 270 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், அந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கானது வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விவகாரங்கள் அதன் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் மூலமாக கிடைத்துள்ள வருவாய் 2% மட்டுமே உயர்ந்து 1.08 பில்லியனை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 1.22 பில்லியனாக இருக்கும் என்று வால் ஸ்ட்ரீட் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த ஆஅண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் சப்ஸ்க்ரிப்ஸன்கள் எல்லாவற்றையும் சேர்த்து 1.18 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.19 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்தது ட்விட்டர் நிறுவனம். மொத்த வருவாய் இந்த காலாண்டில் 1.32 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது
ட்விட்டர் நிறுவன விளம்பரப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விளம்பரதாரர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றனர். எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கின் போக்கு எப்படிச் சென்றாலும், எப்படி முடிவடைந்தாலும் அதன் வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.