Twitter: லிங்க்ட்-இன் தளத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில், புதிய வசதியை ட்விட்டர் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே அதில் மாற்றங்கள் என்பது குவிந்து வருகின்றன. நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன.
அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. மேலும், பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ்:
இதற்கிடையில், ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை ஜூலை 6 அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த ஆப் அறிமுகப்படுத்திய நேரத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதனின் பயன்பாடுகள் தற்போது குறைந்துவிட்டது என்று கூட சொல்லாம். ஆனாலும், ட்விட்டரை பார்த்து காப்பி அடித்து த்ரெட்ஸ் ஆப் உருவாக்கப்பட்டதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார். இந்நிலையில், வேலைவாய்ப்பு தளமான லிங்க்ட்-இன் தளத்திற்கு போட்டியாக புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளார் எலான் மஸ்க்.
வேலைவாய்ப்புகளை வழங்கும் ட்விட்டர்:
அதன்படி, ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வெரிஃபைட் செய்யப்பட்ட நிறுனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ஒரு வசதியை கொண்டு வர உள்ளது. குறிப்பாக அந்த நிறுவனங்களின் ட்விட்டர் பக்கத்தில் பயோ (bio) குறித்த சுயவிவரங்கள் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் அந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை வேலை தேடும் பயனர்கள் தங்களுக்கு தேவையான நிறுவனங்களின் இணையதளத்திற்கு சென்று அந்தந்த நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) எனும் புதிய கணக்கை ட்விட்டர் நிறுவனம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) மூலம் வெரிஃபைடு நிறுவனங்கள் 5 வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். ஏற்கனவே இந்த அம்சம், மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.