உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில்தான் ட்விட்டரை தன்வசப்படுத்தினார்.  முதலில் எலான் ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். பின்னர் ட்விட்டரை தானே வாங்க முடிவு செய்தார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது.  சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.




ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டரில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் சிலவற்றிற்கு  Paywalled Video வசதியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தாங்கள் பதிவிடும் வீடியோவிற்கு $1, $2, $5 மற்றும் $10 என்ற கட்டணங்களை Paywalled Video வசதியில் இணைத்துக்கொள்ள முடியும் . இந்த கட்டணத்தை செலுத்திய பின்னர்தான் முழுமையான வீடியோவை பார்க்க முடியும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் இது கிட்டத்தட்ட ஓடிடி தளத்தில்  சப்ஸ்கிரிப்ஷனை சேர்ப்பது போலத்தான். 


ஆனால் பேவால்ட் வீடியோவை ட்விட்டர் பயனாளர்கள் ரீ-ட்வீட் செய்யவோ அல்லது லைக் செய்யவோ முடியும் . அதற்கெல்லாம் கட்டண சேவை தேவையில்லை என்கிறது.தி வாஷிங்டன் போஸ்ட்டின் அறிக்கை. இந்த அம்சம் அடுத்த ஓரிரு வாரங்களில் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.ஆனால் இந்த சேவையை எலான் மஸ்க் அங்கீகரித்தாரா இல்லையா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.




முன்னதாக எலான் மஸ்க் 'புளூ டிக்'ஐ தொடந்து பயன்படுத்த கட்டண சேவையை அறிமுகப்படுத்தினார். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு இருக்கும். தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு முக்கிய தளமாக ட்விட்டர் விளங்குகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களின் அறிவிப்பு, வாழ்த்து செய்தி போன்றவற்ரை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார்கள்.  இந்நிலையில் ட்விட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.