சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் நஷீர் ஜகான் (82) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் ஹபீஸ் கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி உயிரிழந்தார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் நஷீர் ஜகான் மட்டும் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி நஷீர் ஜகான் வீட்டிற்கு இரண்டு வாலிபர்கள் வந்துள்ளனர். பிறகு அவரிடம் இந்தப் பகுதியில் வீடு காலியாக உள்ளதா? என கேட்டுள்ளனர். இதற்கு நஷீர் ஜகான் வீடு எதுவும் காலியாக இல்லை என தெரிவித்து வாலிபர்களை அனுப்பி வைத்தார். பிறகு அன்று மாலை அந்த இரண்டு வாலிபர்களும் நஷீர் ஜகான் வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி நஷீர் ஜகான் அணிந்திருந்த 15 பவுன் சவரன் தங்க நகைகளை பறித்து தப்பிச் சென்றுவிட்டனர். 



இதில் படுகாயமடைந்த நஷீர் ஜகானை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நஷீர் ஜகான் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கன்னங்குறிச்சி காவல்துறையினர் மீட்டு விசாரித்தனர். பின்னர் நகை திருட்டில் ஈடுபட்டு நஷீர் ஜகானை தாக்கியதாக சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சார்ந்த முஸ்தபா மற்றும் ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நகை ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை தொடர்ந்து அவர்களிடம் கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.