சமூக வலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் ட்விட்டர் நிறுவனம்தான் பெரும்பாலான பிரபலங்களின் நம்பர் ஒன் சாய்ஸ். ”சொல்ல வந்த தகவல்களை சுருக்கமாக சொல்லுங்கள்” என்ற அடிப்படையில் உருவானதுதான் ட்விட்டர். சமீப காலமாக பல இடையூறுகளை சந்தித்தும் வருகிறது.  இந்நிலையில் உலகளவில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகளை நீக்க அந்தந்த அரசு அறிவுறுத்தி வருவதாக ட்விட்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ஊடகவியலாளர்களின் கருத்துகளை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அது சற்று கூடுதலாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.





இது குறித்து நேற்று (ஜூலை 14) வெளிப்படையான அறிக்கை ஒன்றை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராயட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள அந்த தகவலின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகம் முழுவதும் சரிபார்க்கப்பட்ட (Verified) கணக்குகளை வைத்துள்ள 199 பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் பதிவுகளை நீக்கம் செய்வதற்கான சட்ட கோரிக்கைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. அப்போது 361 ஆக இருந்த அந்த கோரிக்கைகள், இந்த ஆண்டின் முதற்பாதியில் 26% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மொத்தமாக உலகளவில் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையில் 14,500 நீக்க கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும் அதில் 30 சதவிகித கோரிக்கைகளை மட்டுமே ட்விட்டர் பதிலளித்தாகவும் தெரிவித்துள்ளது. பதிவுகளை நீக்கம் செய்வதற்கான அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.இது தவிர துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.






சில நாடுகள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. கியூபாவில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு பேஸ்புக், டெலிகிராம் போன்றவற்றிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதே போல நஜீரியா அந்த நாட்டில்  ட்விட்டரை பயன்படுத்த தடை விதித்துவிட்டது. மேலும் தொலைக்காட்சி , வானொலி போன்ற நிறுவனங்கள் ட்விட்டர் மூலமாக தகவல்களை சேமிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் தொழில்நுட்ப திருத்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு முரணானது என அதனை ஏற்காமல் அடம்பிடித்தது ட்விட்டர். மத்திய அரசுடன் பலகட்ட மோதலுக்கு பிறகு  ட்விட்டர் தற்போது அதற்கான பொறுப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளது.  சமூக ஊடகங்களை கண்காணிக்கும் வகையில் உருவக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அவதூறு, ஆபாசம், வெறுப்புணர்வை தூண்டுதல், வதந்தி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 133 பேரின் கணக்குகளை இந்தியாவில் நீக்கிதாகதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது