உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களை தோற்றுவித்து நடத்தி வருகிறார். இந்த வரிசையில் செல்வாக்கு மிக்க நபரான மஸ்க் கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டில் 44 அமெரிக்க பில்லயன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார்.


ட்விட்டரை வாங்கிய முதலே பல மாற்றங்களை கொண்டு வர தொடங்கினார் மஸ்க். ட்விட்டரில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்ட பயனர்கள் கட்டணம் செலுத்தாமலே ப்ளூ டிக் வெரிஃபிக்கேஷன் பெறலாம் என்றும் குறைவான பாலோவர்ஸ்கள் கொண்டவர்கள் மாதம்தோறும் கட்டணம் செலுத்தினால்தான் ப்ளூ டிக் கிடைக்கும் என்ற நிபந்தனையை முன்வைத்தார் மஸ்க்.




அத்துடன் முடியாத மஸ்கின் அலப்பறை, மீம்ஸ்களின் ட்ரெண்டான நாயையும் வம்பிற்கு இழுத்தது. சீம்ஸ் என்றழைக்கப்படும் அந்த நாயின் முகம் ட்விட்டரின் லோகோவாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் ஒரு சில நாட்களுக்கு மட்டும் நீடிக்க, மீண்டும் என்ட்ரி கொடுத்தது சின்னஞ்சிறு பறவை. தற்போது, ட்விட்டரின் பெயரையும் அதன் லோகோவையும் எக்ஸாக (X) மாற்றியுள்ளார். 


எக்ஸ் பெயருக்கு என்ன காரணம்?


ஆபாச தளங்களில் இருக்கும் அந்தரங்க படங்களும் வீடியோக்களும், ட்விட்டர் தளத்தில் வட்டமிட்டு கொண்டிருப்பதை நம்மில் பலர் நிச்சயமாக பார்த்திருப்போம். அதுமட்டுமின்றி அதுபோன்ற வீடியோக்களுக்கான தனி கணக்கும் ட்விட்டரில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதுவரை அதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ட்விட்டரின் பெயர் எக்ஸாக மாற்றப்பட்டுள்ளது, விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


நெட்டிசன்களுக்கு கண்டெண்ட் கொடுத்த மஸ்க்




முக்கியஸ்தர்களும் பிரபலங்களும் அதிகாரப்பூர்வமான செய்திகளையும் அறிவிப்புகளையும் வெளியிட பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் தற்போது எக்ஸாக மாற்றப்பட்டுள்ளது. இதை வைத்து மீம் பாய்ஸ், வரிசையாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.  “அந்த பறவைக்கு வாய் இருந்தால் கண்ணீர் வடிக்கும்”, “இந்த எக்ஸாவது நிரந்தரமாக இருக்குமா? இல்லை இதுவும் டாட்டா சொல்லிவிட்டு போய்விடுமா?”, “எக்ஸின் எக்ஸ் பெயர் ட்விட்டர்” போன்ற கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.


எக்ஸால் தினசரி வாழ்க்கையில் நடக்க போகும் வேடிக்கை (இது வெறும் கற்பனையே)


முன்பெல்லாம் யாராவது ட்வீட் செய்திருந்தால், ‘ஹேய்.. அவரின் ட்வீட்டை பார்த்தீர்களா?’ என கேட்போம் ஆனால் இனிமேல், ‘ஹேய் அவரின் எக்ஸை பார்த்தீர்களா?’ என்றுதான் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ‘உங்களுக்கு எத்தனை எக்ஸ் உள்ளது?’,  ‘எக்ஸை போட்டுவிட்டீர்களா?’,‘உங்கள் எக்ஸை ஷேர் பண்ணியாச்சா?’,  ‘எக்ஸோட எங்கேஜிங்கா இருக்கீங்களா?’போன்ற வாக்கியங்களை இனிமேல் தினசரி கேட்க நேரிடும் போல...!