டிவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் கடந்த மே மாதத்தில்  இருந்தே மோதல் வெடித்து வருகிறது. புதிய டிஜிட்டல் கொள்கையினை மத்திய அரசு அறிவித்ததில் இருந்து அதனை ஏற்காமல் போர் கொடி உயர்த்தி வந்தது ட்விட்டர். புதிய தொழில்நுட்ப கொள்கைக்குள் அடங்க மறுத்த ட்விட்டர் மத்திய அரசின் கடுங்கோபத்திற்கு ஆளானது . இதன் காரணமாக  ட்விட்டரின் “இண்டர்மீடியேட்டர் ஸ்டேட்டஸை” பறித்தது மத்திய அரசு .இரு தரப்புக்கும் இடையிலான மோதல் போக்கு  இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அதற்குள்ளாக மீண்டும் புதிய சர்ச்சையை  தொடங்கிவிட்டது ட்விட்டர்.


 




ஏற்கனவே  ட்விட்டரின் குறைதீர்ப்பு அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்த தகவலின் சூடு அடங்குவதற்குள் அடுத்த பிரச்சனைக்குள் சிக்கியுள்ளது டிவிட்டர். தற்பொழுது தனது டிஜிட்டல் வரைபடம் ஒன்றில் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளையும் வேறு நாடுகளாக காட்டியுள்ளது. இந்த புதிய சர்ச்சை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.எப்படி எங்கள் நாட்டில் உள்ள பகுதிகளை வேறு நாடாக காட்ட முடியும் என பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.  #twittermap  என்ற முன்னெடுப்பின் மூலம் பலரும் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் உள்ள tweep life என்ற பகுதின் கீழ் உள்ள இந்திய வரைப்படத்திலேயே இவ்வாறு தவறாக காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி பிரித்து காட்டப்பட்டுள்ளது.காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்காக அண்டை  நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் ட்விட்டரின் இத்தகைய செயல் மத்திய அரசு வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து  நேற்று இரவோடு இரவாக இந்திய வரைபடத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது ட்விட்டர்.


இந்திய வரைபட சர்ச்சையில் சிக்குவது ட்விட்டருக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போல யூனியன் பிரதேசமான லடாக்கினை சீனாவின் பகுதியோடு இணைத்து ட்விட்டர் மேப் காட்டியது. இதனையடுத்து  ட்விட்டர் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியது. இதனையடுத்து வரைபடத்தில் ஒழுங்கு மாறுதல்களை கொண்டுவந்தது ட்விட்டர். இவ்வாறு ஒன்றின் பின் ஒன்றாக  மத்திய அரசுடன் மோதல் போக்கினை ட்விட்டர் தானாகவே ஏற்படுத்திக்கொள்கிறது. ஏற்கனவே டிஜிட்டல் கொள்கையினை ஏற்க மறுத்த பிரச்சனை,இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைத்திருந்த பிரச்சனை , இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியின் திடீர் ராஜினாமா ,அவ்வப்போது மத்திய அரசின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் இருத்தல், இதோ தற்பொழுது வரைபட பிரச்சனை என அனைத்திலும் தன்னிச்சை போக்கை கையாண்டு வருகிறது ட்விட்டர்.இதற்கு இந்திய அரசின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்  என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.