ட்விட்டரில் பிரபலங்கள் உட்பட பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வந்த நீல நிற குறியீட்டை (Blue Tick) அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
தொழில்நுட்பங்கள் மாறிவிட்ட இந்த காலக்கட்டத்தில் மக்கள் உலகம் முழுவதும் நடைபெற்ற தகவல்களை பெறவும், மக்களுடன் உரையாடவும் பங்கு வகிக்கும் முக்கிய தகவல் தொடர்பு சாதனங்களில் சமூக வலைத்தளங்களின் பங்கு மிகப்பெரியது. அதில் ட்விட்டரின் பங்கு மகத்தானது என்று சொல்லலாம். இந்தியா உள்பட பல உலக நாடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ள நிலையில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கினார்.
அவருக்கு கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) அந்நிறுவனம் கைமாறியது. அன்று முதல் ட்விட்டர் நிறுவனத்தில் மட்டுமல்லாது செயலியிலும் சம்பவங்கள் செய்து எலான் மஸ்க் தினமும் தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருகிறார்.
ப்ளூ டிக் நீக்கம்
அந்த வகையில் பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ டிக் எனப்படும் நீல நிற குறியீடு (Blue Tick) அளிக்கப்பட்டு வந்தது. பல துறை சார்ந்த பிரபலங்களுக்கு இந்த குறியீடானது இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே ட்விட்டரின் சிஇஓ வாக எலான் மஸ்க் பொறுப்பேற்றதும், இந்த நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாத கட்டணமாக இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 செலுத்தி யார் வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ கணக்குக்கான குறியீட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பணம் செலுத்தாத ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை காட்ட பயனாளர்கள் சந்தாதாரர்களாக மாற வேண்டும் என ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியது. இந்த திட்டத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேசமயம் பயனாளர்களுக்கு ப்ளூ டிக், வணிக அக்கவுண்ட்களுக்கு கோல்டன் டிக், அரசு அமைப்புகளுக்கு கிரே டிக் என 3 வகையில் இந்த அதிகாரப்பூர்வ கணக்குக்கான குறியீடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் கட்டணம் செலுத்த அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பயனாளர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு அளிக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலானதோடு ட்விட்டரிலும் #BlueTick என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.