டிவிட்டரில் கருத்துகளை பதிவிட முடியவில்லை, புதியதாக யாரையும் ஃபாலோ செய்ய முடியவைல்லை என, பயனாளர்கள் இடையே புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், டிவிட்டரில் சத்தமின்றி அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரம்பு கட்டுப்பாடுகள் தான் புகார்களுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டரின் உதவி தளத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் பின்வருமாறு:
புதிய வரம்புகள்:
- பயனாளர்கள் நாளொன்றிற்கு 500 குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும்
- நாளொன்றிற்கு 2,400 டிவீட்களை மட்டுமே பதிவிட முடியும், ரீடிவீட்களும் டிவீட்டாகவே கருதப்படும்
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட டிவீட்கள் மட்டும் தான் பதிவிட முடியும் (கட்டுப்பாடு தொடர்பான விரிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை)
- பயனர்கள் தங்கள் கணக்கு மின்னஞ்சலில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும்
- நாளொன்றிற்கு 400 டெக்னிகல் ஃபாலோ மட்டுமே செய்ய முடியும். ( இது ஒரு தொழில்நுட்பக் கணக்கு வரம்பு மட்டுமே, அதிகப்படியானோரை ஃபாலோ செய்வதற்கு கூடுதல் விதிகள் உள்ளன )
- நீங்கள் 5,000 பிற கணக்குகளைப் பின்தொடர்கிறீர்கள் எனில், புதியதாக பிறரைப் பின்தொடர்வதற்கான எந்தவொரு முயற்சியும் "கaccount-specific ratios” முறையில் கட்டுப்படுத்தப்படும்.
எலான் மஸ்க் கருத்து என்ன?
மேற்கூறிய வரம்புகளில் ஏதேனும் ஒன்றை பயனர் அடைந்து விட்டால், "நீங்கள் உங்களது வரம்பை அடைந்துவிட்டீர்கள், நாளை முயற்சி செய்யுங்கள் என நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அண்மையில் டிவிட்டர் செயலி முடங்கியதற்கு காரணமும், புதியதாக கொண்டு வரப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் தான் காரணம் என கூறப்படுகிறது. பொதுவாக டிவிட்டரில் வரும் அப்டேட்கள் குறித்து அதன் உரிமையாளரான, எலான் மஸ்க் உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து விடுவார். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை அவர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
கட்டண விவரம்:
இதனிடையே, அமெரிக்கா போன்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் மட்டுமின்றி, ட்விட்டரின் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மாதாந்திர சந்தா கட்டணம் 900 ரூபாய் ஆகவும், அதே சமயம் இணையத்தில் கட்டணம் மாதத்திற்கு ரூ.650 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வருடாந்தரக் கட்டணமாக ரூ. 6,800-ஐ செலுத்தியும் சந்தாதாரகாக சேரலாம். இதன் விலை மாதத்திற்கு சுமார் ரூ.566 ஆகும். இருப்பினும், இந்த திட்டம் இணையத்தில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்தி சந்தாதாரராக மாறுவதன் மூலம், ப்ளூ டிக் பெறுவது மட்டுமின்றி, டிவிட்டரில் வழங்கப்படும் பல்வேறு புதிய அப்டேட்டுகளும் மற்றவர்களை காட்டிலும் முன்னதாக அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.