டிவிட்டர் செயலியில் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதோடு, பாதுகாப்பான முறையில் தனிநபர்களுக்கான குறுந்தகவல்களை அனுப்பும் என்க்ரிப்டட் வசதியும் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் - எலான் மஸ்க்:
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டிவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு எலான் மஸ்க் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும், செயலியில் அப்டேட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு, நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு டிவிட்டர் 2.0 அல்லது எல்லாவற்றிற்குமான செயலியாக அது உருவாக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இந்த புதிய மேம்படுத்தப்பட்ட டிவிட்டர் செயலியில், பயனாளர்களுக்கு ஏராளமான புதிய வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய அம்சங்கள்:
பாதுகாப்பான (என்க்ரிப்டட்) முறையில் தனிநபர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்புவது, நீளமான டிவீட்களை பதிவு செய்வது, ஒருங்கிணைக்கப்பட்ட பணப்பரிமாற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் புதிய மேம்படுத்தப்பட்ட டிவிட்டர் செயலியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் டிவீட்:
இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், டிவிட்டர் செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை பயனாளர்கள் எதிர்பார்க்கலாம். இந்த வசதியின் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களுக்கான நபர்களை டிவிட்டர் செயலி மூலமாக பேசலாம். செல்போன் எண்களை இனி யாரேனும் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த புதிய அறிவிப்பால் டிவிட்டர் செயலியானது, ஏற்கனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை உள்ளடக்கி பிரபலமாக உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளுக்கு நேரடி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்க்ரிப்டட் குறுந்தகவல்:
வாட்ஸ்-அப் செயலியில் இருப்பதை போன்று பாதுகாப்பான (என்க்ரிப்டட்) முறையில் குறுந்தகவல் அனுப்பும் வசதி, டிவிட்டர் செயலியில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. அதேநேரம், வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிக்கும் இந்த என்க்ரிப்டட் பாதுகாப்பு அம்சம் கிடைக்குமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
டிவிட்டர் கணக்குகுகள் நீக்கப்படுகிறதா?
இதனிடையே, நீண்ட காலமாக செயல்படாமல் உள்ள கணக்குகளை நீக்க உள்ளதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்தது. பயனர்கள் உண்மையான கணக்குகள் மற்றும் தொடர்புடைய உள்ளடக்கத்துடன் கலந்துரையாடுவது உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தனியுரிமையை அதிகரிக்கலாம் மற்றும் செயலற்ற கணக்குகளை அகற்றுவதன் மூலம் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட தளத்தை எதிர்பார்க்கலாம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு வெரிஃபைட் குறியீடு வழங்க கட்டணம் வசூலிக்கும் முறையை டிவிட்டர் நிறுவனம் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.