டிவிட்டர் (Twitter) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் தற்போது பல்வேறு நிறங்களில் அப்டேட் செய்து வழங்கப்படும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். பொன்நிறம், சாம்பல் மற்றும் நீல நிறங்களுடன் இனி டிவிட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் வெரிஃபைடு உடன் பயன்பாட்டில் இருக்கும். 


எலான் மஸ்க்கும் டிவிட்டரும்:


டிவிட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், டிவிட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. டிவிட்டரில் போலியான பயனர்களை கண்டறியும் வகையில் வெரிஃபிகேசன் முறையிலும் மாற்றங்களை செய்ய திட்டம் இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு  மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.


மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 'official' எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு 'parody' எனும் பேட்ச் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


ட்விட்டர் வார்த்தைகள் எண்ணிக்கை:


ட்விட்டர் பயனர் ஒருவர் எலான், ட்விட்டரில் 280 வார்த்தைகளில் இருந்து 4 ஆயிரம் வார்த்தைகளாக உயர்த்தப்படுவது உண்மையா? என்று கேள்வி அனுப்பியுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டரில் ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார். 


 



கோல்டு டிக்


நிறுத்தி வைக்கப்பட்ட ப்ளூ டிக் சேவை:


டிவிட்டரில் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியோர்களின் போலியாக கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றதால் ட்விட்டரில் போலி கணக்குகள் கணிசமாக உயர்ந்தன. இதனை தடுப்பதற்காக கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வெரிஃபைட் அக்கவுண்டை பெறும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், சில நாட்களில் அச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. 


இனி பல நிறங்களில் டிவிட்டர் வெரிஃபிகேசன் டிக்:


டிவிட்டரில் போலியான அக்கவுண்ட்கள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு, ப்ளூ டிக் மட்டுமின்றி தனிநபர் மற்றும் நிறுவனங்களை தனியே அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் வெவ்வேறு வண்ணங்களால் ஆன வெரிஃபிக்கேசன் டிக் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


வண்ணங்களின் விவரம்:


கோல்டு நிற டிக் தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கு கிரே அதாவது சாம்பல் நிற டிக், பிரபலங்கள் அல்லது தனிநபர் ஆகியோருக்கு ப்ளூ நிற டிக் என்ற நடைமுறை இனி தொடர உள்ளது.


கிரே டிக் மற்றும் ’official’ என்ற லேபிள் கட்டணம் செலுத்தி வாங்க முடியாது என்று டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
’official' என்ற லேபிள் அரசு சார்ந்த டிவிட்டர் அக்கவுண்ட்கள், வணிக ரீதியிலான நிறுவனங்கள், பெரும் செய்தி ஊடகங்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிரபலமானவர் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். கோல்டு, கிரே மற்றும் ப்ளூ நிற டிக் எவ்வாறு வழங்கப்படுகிறது அதன் வரையறைகள் குறித்து அடுத்த வாரங்களில் தகவல் வெளியாகும் என்றும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.