இந்திய சந்தையில் தனது அடுத்த மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது பிரபல ட்ரையம்ப் மோட்டார் நிறுவனம். இந்த கொரோனா காலகட்டத்தில் பன்னாட்டு பைக் மற்றும் கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல புது மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாடல் வாகனங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷன் என்ற பைக்கினை 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டுவந்தது இந்த நிறுவனம்.
இந்நிலையில் Bonneville Bobber என்ற வாகனத்தின் 2021 மாடலை தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சிவப்பு, கருப்பு மற்றும் க்ரே ஆகிய மூன்று நிறங்களில் இந்த வாகனத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பைக்குகளின் ஆன்லைன் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ட்ரையம்ப் நிறுவனத்தை பொறுத்தவரை பாப்பர் வகை மோட்டார் சைக்கிள்கள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் நகரை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனம் தான் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம். 1900களின் தொடக்கத்தில் உருவான இந்த நிறுவனம் ஜான் என்பவரால் 1983ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் பல மாடல் பைக்குகளை இதுவரை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த நிறுவனத்தின் வாகனம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய சந்தையிலும் கடந்த 2013ம் ஆண்டு முதல் தனது சேவையை அளித்து வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 5000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
ட்ரையம்ப் போன்வில் பாபர் 2021 ஜெட் பிளாக் எடிஷன் 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், கார்டோவான் ரெட் எடிஷன் 11 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கும் மற்றும் மேட் ஸ்ட்ராம் க்ரே மேட் அயன்ஸ்டோன் எடிஷன் 12 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இந்த வாகனம் 100 கிலோமீட்டர் செல்ல சுமார் 4.6 லிட்டர் பெட்ரோல் செலவிடும் என்று ட்ரையம்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 6 ஸ்பீட் 1200சிசி திறனுடன் லீக்விட் கூல் 8 வால்வு என்ஜின் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரையம்ப் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் தனது வாகனங்களை விற்பனை செய்துவருகிறது.