ட்ராய் என்றழைக்கப்படும் இந்தியத் தொலைதொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையம் பிராட்பேண்ட் இணைப்புகளில் இணைய வேகத்தை அதிகரிக்கவும், குறைந்தபட்ச டவுன்லோட் வேகம், 2Mbps என நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இது தற்போதைய இணைய வேகமான 512Kbps-ஐ விட நான்கு மடங்கு பெரியது. கடந்த 2014ஆம் ஆண்டு, 256Kbps ஆக இருந்த வேகம் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும், ட்ராய் அரசுகளிடம் கிராமப்புறங்களில் ப்ராட்பேண்ட் இணைப்புகளை அதிகரிக்கவும், மாதக் கட்டணத்தில் 50 சதவிகித சலுகையையும் அமல்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
301 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டுள்ள ட்ராய் அமைப்பு, நாடு முழுவதும் பிராட்பேண்ட் இணைப்புகளை அதிகரிக்க கோரி முக்கிய பரிந்துரையாக முன்வைத்துள்ளது. நாடு முழுவதும் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது பயன்பாட்டில் இருக்கும் 512Kbps இணைய வேகம் மிகச் சாதாரண செயலிகளைப் பயன்படுத்தக் கூட போதவில்லை என்றும், இணைய வேகம் 2Mbps ஆக மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது ட்ராய்.
”இணைய வசதி தரும் நிறுவனம் ஒவ்வொரு தனி வாடிக்கையாளருக்கும் இணைய வசதியைப் பகிரும் புள்ளியில் இருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளியின் வரை, குறைந்தபட்ச டவுன்லோட் வேகம் 2Mbps ஆக இருப்பதோடு, தங்குதடையற்ற இணைய வசதியையும் அளிக்கும் இணைப்பே பிராட்பேண்ட்” என்று பிராட்பேண்ட் இணைப்பு குறித்து தங்களது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது ட்ராய் அமைப்பு.
இங்கிலாந்து, ஐரோப்பா முதலான உலகின் மற்ற பகுதிகளில் வழங்கப்படுவது போல, இந்தியாவிலும் டவுன்லோட் வேகத்தை அளவீடாகக் கொண்டு, பிராட்பேண்ட் வசதிகளை உருவாகுமாறு பரிந்துரைத்துள்ளது. பிராட்பேண்ட் வசதியை மூன்று விலைகளில் அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இணைய வேகத்தின் அடிப்படையில் 2 முதல் 50Mbps வரையிலான வசதி ‘பேசிக் பிராட்பேண்ட்’ எனவும், 50 முதல் 3000Mbps வரையிலான வசதி ‘ஃபாஸ்ட் பிராட்பேண்ட்’ எனவும், 300Mbps-க்கு மேல் இணைய வேகத்தை அளிக்கும் வசதி ‘சூப்பர்ஃபாஸ்ட் பிராட்பேண்ட்’ எனவும் அழைக்கலாம் எனவும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
டவுன்லோட் வேகம் குறித்தும், அதன் அளவுகளைக் குறித்தும் பேசிய பரிந்துரை ஆவணத்தில், ட்ராய் அமைப்பு பிராட்பேண்ட் வசதியை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய தேவை குறித்து கூறியுள்ளது. இந்தியாவில் 9.1 சதவிகித வீடுகளில் மட்டுமே பிராட்பேண்ட் வசதி இருப்பதாகவும், பெரும்பாலானோர் மொபைல் பிராட்பேண்ட் மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளது.
இணைய வசதிகளை அனைவருக்கும் எடுத்துச் செல்ல, ட்ராய் அமைப்பு நாட்டின் பல்வேறு நிறுவனங்களும் முன் வர வேண்டும் எனவும், அரசு தேசிய அளவிலான போர்ட்டல் ஒன்றை உருவாக்கி, அதில் இணையத்திற்கான வயர்களையும், டவர்களையும் அமைக்க அனுமதி தர வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பிராட்பேண்ட் பயன்படுத்துவோருக்குக் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் எனவும், மாதம் ஒன்றிற்கு 200 ரூபாய்க்கு மேல் கட்டணம் விதிக்கப்படக் கூடாது எனவும் பரிந்துரை தெரிவித்துள்ளது.