InstagramThreads : எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான செயலியான த்ரெட்ஸை இன்று (ஜூலை 6) அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


இன்ஸ்டாகிராம் 'த்ரெட்ஸ்’


எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


இந்நிலையில், ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை இன்று (ஜூலை 6) அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை தற்போது அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் பயனர்களும், முதல் 4 மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்களும, முதல் 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களும் கணக்கு தொடங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.


த்ரெட்ஸ்:


இதற்கிடையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார் மார்க் ஸூகர்பெர்க். கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டில் மார்க் ஸூகர்பெர்க் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு த்ரெட்ஸ் அறிமுகத்தையொட்டி, தற்போது தான் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் மட்டும் பகிரப்பட்டுள்ளது. வேறு எந்த தகவலையும் அவர் பதிவிடவில்லை. இப்படி ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் செயலிக்கும் ட்விட்டருக்கு இருக்கும்  வித்தியாசங்களை பார்க்கலாம்.


வித்தியாசம் என்ன?



  • ’த்ரெட்ஸ்' செயலியை பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் 'த்ரெட்ஸ்' செயலில் நேரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பயோவை பயனர்கள் பயன்படுத்த முடியும். அதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் பாலோ செய்யும் நபர்கள் 'த்ரெட்ஸ்’ செயலியில் இருந்தால் அவர்களையும் பின்தொடர வசதி இருக்கிறது. 

  • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளூடிக் பெற்றிருப்பவர்கள் அதனை அப்படியே த்ரெட்ஸ் செயிலியிலும் பயன்படுத்த முடியும். ஆனால் ட்விட்டரில் ப்ளூடிக் பெற 8 டாலர் செலுத்த வேண்டி உள்ளது.

  • ட்விட்டரில் செயலியில் ப்ளூடிக் பயனர் இல்லாதவர்கள் 2.20 நிமிடங்கள் நீளம் கொண்ட வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் த்ரெட்ஸில்  பயனாளர்கள் 5 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும்

  • ட்விட்டரில் ப்ளூடிக் பயனாளர்கள் 25 ஆயிரம் எழுத்துகளிலும், ப்ளூடிக் இல்லாதவர்கள் 250 எழுத்துகளையும் பயன்படுத்தி ட்வீட் செய்ய முடியும். ஆனால் த்ரெட்ஸ் செயலியில் ஒருவர் 500 எழுத்துகளில் பதிவுகள் செய்ய முடியும். மேலும், ட்விட்டரை போன்று த்ரெட்ஸ் செயலியில் எந்த கட்டணமும் செலுத்துவது போன்று அறிமுகப்படுத்தப்படவில்லை.

  • ட்விட்டர் செயலியில் ஹோம்பேஜில் டிரெண்டிங்கில் உள்ளவற்றை காட்டும். ஆனால் இதுபோன்று டிரெண்டிங்கில் இருப்பதை த்ரெட்ஸ் செயலியில் பார்க்க முடியாது. 

  • ட்விட்டரில் தேவைகேற்ற பதிவை நாம் டிராப்ட்டில் சேமித்து கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால் த்ரெட்ஸ் செயலியில் இத்தகைய வசதி தற்போது இல்லை.

  • ட்விட்டரில் குறிப்பிட்ட பதிவுகளுக்கு நடுவே விளம்பரங்கள் வருகின்றது. ஆனால் த்ரெட்ஸ் செயலியில் விளம்பர பதிவுகள் வராது. இதனால் பயனர்கள் இடையூறு இன்றி த்ரெட்ஸ் செயலியை பயன்படுத்தலாம். 

  • இன்ஸ்டாகிராம் பக்கத்தை போல் பிளாக் செய்யும் வசதி த்ரெட்ஸ் செயலியில் உள்ளது. இது ட்விட்டரிலும் செயல்பாட்டில் உள்ளது.