வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தும் ஆப்பிள் பயனாளர்களுக்கு என பிரத்யேகமான, புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ஐஓஎஸ் பயனாளர்கள் இனி புகைப்படங்களில் உள்ள டெக்ஸ்டை கூட காபி செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்த உள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி நிறுவனங்களிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்தடுத்து வழங்கப்படும் அப்டேட்களை கண்டு பயனாளர்கள் சளைத்தே போனாலும், விடாமல் தொடர்ந்து அப்டேட்கள் வழங்கப்பட்டு தான் வருகிறது. அந்த வரிசையில் தான் ஆப்பிள் பயனாளர்களுக்கு என ஒரு புதிய பிரத்யேக அப்டேட் வாட்ஸ்-அப் செயலியில் வழங்கப்பட உள்ளது.
புதிய அப்டேட் என்ன?
அதன்படி, ஐபோன் பயனாளர்கள் தங்களது செல்போனில் எடுக்கும் புகைப்படங்களில் உள்ள டெக்ஸ்டை மட்டும் தனியாக காபி செய்து எடுத்து பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் ஐபோன்களில் இந்த அம்சம் ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் நிலையில், v23.5.77 வெர்ஷன் வாட்ஸ்-அப் செயலியை கொண்ட அனைத்து ஐபோன்களிலும் இனி இந்த புதிய அம்சம் வழங்கப்பட உள்ளது.
புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
டெக்ஸ்ட் அடங்கிய புகைப்படத்தை திறக்கும்போது, அதன்மீது புதிய பட்டன் ஒன்று தோன்றும். அதனை கிளிக் செய்தால் அந்த புகைப்படத்தில் உள்ள டெக்ஸ்டை காபி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம், பதுகாப்பு காரணங்களால் view once image-களில் புதிய வசதியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்:
அண்மையில் தான் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு பிக்சர் - இன் பிக்சர் மோட் ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதோடு, ஃபோட்டோக்களை ஸ்டிக்கர்களாக மாற்றுவது, வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸாக வைப்பது போன்ற அப்டேட்களும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்யும் புதிய வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது.
குரூப்சாட்டில் புதிய வசதி
இதனிடையே, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் என இருதரப்பு பயனாளர்களுக்கும் குரூப் சாட்டில் புதிய வசதி ஒன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, வாட்ஸ்-அப் குழுவில் தெரியாத (கான்டெக்ட் லிஸ்டில் (unknown contacts) இல்லாத நபர் மெசேஜ்) நபர் குறுந்தகவல் அனுப்பினால், தொடர்பு எண்ணிற்கு பதிலாக ‘ பயனர் பெயர்’ டிஸ்ப்ளே செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. WaBetaInfo வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ”ஆண்ட்ராய்டு 2.23.5.12 அப்டேட்டில் வாட்ஸ்-அப் குழு உரையாடலில் தெரியாத நபரிடமிருந்து மெசேஜ் வரும்போது மொபைல் எண்களுக்கு பதிலாக, பயனரின் பெயர் (Username) தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.