இணையசேவை இல்லாமல் யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிநிலை கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (10/08/2023) நடைபெற்ற நிதிநிலை கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனை குறித்து மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
யு.பி.ஐ. (Unified Payments Interface (UPI)) பணப்பரிவர்த்தனை முறை நாடு முழுவதும் மிகவும் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் (artificial intelligence system.) அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உரையாடல் மூலம் (natural language conversations) பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) இந்த புதிய நடைமுறைக்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் இந்த புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ. உரையாடல் மூலம் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பானதாக அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, யு.பி.ஐ. லைட் (UPI Lite) மூலம் Near Field Communication (NFC) தொழில்நுட்பத்தை பயனாளர்கள் பயன்பெற முடியும். இணையதள் சேவை இல்லாதாக பகுதிகளிலும் மோசமான இணைய சேவை உள்ள இடங்களிலும் இந்த நியர் ஃப்ல்டு கம்யூனிகேசன் முறையை பயன்படுத்திகொள்ளலாம்.
பணப்பரிவர்த்தனை தோல்வியடைவதை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இணையசேவை இல்லாமல் யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
யு.பி.ஐ. லைட் மூலம் நாள் ஒன்றுக்கு பின்கோட் இல்லாமல் ரூ.500 பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதன் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ.2,000 மாற்றமின்றி தொடர்கிறது.
பேடி எம்., BHIM, கூகுள் பே ஆகியவற்றில் யு.பி.ஐ. லைட் உள்ளது. கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி., இந்தியன் வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் யு.பி.ஐ. லைட் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Near Field Communication தொழில்நுட்பம் மூலம் யு.பி.ஐ பயன்படுத்தும் நடைமுறை இணையதள சேவை இல்லாமல் அதிவேகத்தில் பணபரிமாற்றம் மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (10/08/2023) நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் பேசியவர்,” தக்காளி போன்ற காய்கறிகள், தானியங்கள், பருப்பு விலை உயர்ந்துள்ளது. நாட்டில் சில்லறை பணவிக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்தார்
மேலும், நாட்டின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15 சதவீதம் பங்களிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 2,000 நோட்டுகளில் 87% திரும்பபெறப்பட்டுவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.