மெசேஜ் செய்வதற்காகப் பலராலும் பயன்படுத்தப்படும் பிரபல செயலியான டெலிகிராம் இனி திரைப்படங்களின் ஸ்பாய்லர்களைப் பயனாளர்களுக்கு மறைக்கும் சிறப்பம்சத்தை அமல்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவரங்களை டெலிகிராம் செயலியின் subreddit பக்கத்தில் வெளியிட்டுள்ள டைலன் ரூசெல் என்பவர் விரைவில் டெலிகிராம் மெசெஞ்சர் செயலியில் “sensitive or movie-spoiling text” என்று குறிப்பிடப்படும் திரைப்பட ஸ்பாய்லர்கள், உணர்ச்சியைத் தூண்டும் விதமான படங்கள், வீடியோக்கள் முதலானவற்றை மறைக்கும் அம்சம் புதிதாக இடம்பெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல்களின் படி, ஒரு பயனாளர் திரைப்பட ஸ்பாய்லர்களை ஒரு சாட் பாக்ஸில் குறிப்பிடுகிறார் என்றால், அவர் அனுப்பும் மெசேஜில் இடம்பெற்றுள்ள சொற்கள் அனைத்தும் தானாகவே ஒன்றின் இடம் மற்றொன்றுக்கு மாறி, மெசேஜில் கூறப்பட விரும்பும் செய்தியை வெளிப்படுத்தாமல் இருக்குமாறு மாற்றியமைக்கும். மேலும், இவை சொற்களாகவோ, வாக்கியங்களாகவோ இல்லாமல் பிக்சல்களால் மறைக்கப்பட்ட வார்த்தைகளாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், இதனைப் படிக்க விரும்புபவர் தானாகவே முயன்று அந்த மெசேஜை அழுத்தினால் மட்டுமே, அதில் குறிப்பிட்டுள்ள செய்தி தெளிவாக மாற்றித் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
`மேலும், சாட் பாக்ஸில் மறைக்கப்பட்ட செய்தியாக வருவது ஸ்பாய்லர் என்று நமக்குக் குறிப்பிடப்படாமல் வெறும் சிறிய கண் ஐகான் இடம்பெற்றிருப்பதால், அதனைப் பழகுவதற்குப் பெரும்பாலானோருக்குப் பல நாள்கள் ஆகலாம்’ எனவும் இந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தகவல்கள் வெறும் எழுத்துப் பூர்வமாக அனுப்பப்படும் மெசேஜ் பற்றியதாகவே இருக்கின்றன. மேலும், ஸ்பாய்லர்களிடம் இருந்து தப்பில் வசதியை படங்கள், வீடியோக்கள் முதலான மீடியா ஃபைல்களுக்கும் சேர்த்து அமல்படுத்துவது பயனாளர்களின் திரை அனுபவத்தை மேலும் சிறந்த ஒன்றாக மாற்றியமைக்கும் எனக் கருத்துகள் எழுந்துள்ளன. மேலும், இது போன்ற மெசேஜ்களைத் திறப்பதற்கு முன்பு, எச்சரிக்கை விடுக்கும் ஐகான்களையோ, எச்சரிக்கையைக் காட்டும் பாக்ஸ்களோ தோன்றும் விதமாக இதன் மென்பொருள் வல்லுநர்கள் உருவாக்கினால், டெலிகிராம் நிறுவனம் இந்தச் சிறப்பம்சத்தை உருவாக்குவதற்கான காரணம் பூர்த்தியடையும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆப்பிள் ஐஃபோனில் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலியின் வீடியோவில் இந்தப் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது மட்டுமே வெளியாகியுள்ளது. டெலிகிராம் உலகம் முழுவதும் பல்வேறு மென்பொருள்களால் இயங்கும் கேட்ஜெட்களைப் பயன்படுத்துபவர்களிடம் முக்கிய செயலியாக இருந்து வருகிறது. மேலும், ஸ்பாய்லர்களிடம் இருந்து தப்பிக்கும் சிறப்பம்சத்தை வெறும் ஆப்பிள் பயனாளர்களுக்கு மட்டுமே அளிப்பது என்பது சரியான ஒன்றாக அமையாது. எனவே, இதனைப் பிற மென்பொருள்களுக்கும், குறிப்பாக ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அதே subreddit பக்கத்தில் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டுள்ளது.