இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக, கடந்த வாரம் உலகின் முன்னணி பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்பட 17 பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் என், ராம் மற்றும் சசிகுமார் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,


“இந்த ராணுவ தரப்பு உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இத்தகைய வெகுஜன கண்காணிப்பு பல அடிப்படை உரிமைகளைம சுருக்கி, நமது ஜனநாயக அமைப்பின் முக்கிய தூண்களாக செயல்படும் சுயாதீன நிறுவனங்களுக்குள் ஊடுருவி, ஸ்திரத்தன்மையை தாக்கும் முயற்சியை குறிக்கிறது.




 


இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு தங்கள் பதிலில், பெகாசஸ் உரிமங்களைப் பெறுவதை திட்டவட்டமாக நிராகரிக்கவில்லை என்பதையும், இதுதொடர்பாக மிகவும் கடுமையாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான மற்றும் சுயாதீன விசாரணையை உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பெகாசஸ் உளவு என்பது தகவல் தொடர்பு, அறிவுசார் மற்றும் தகவல் தனியுரிமை மீதான நேரடித்தாக்குதல் ஆகும். மேலும், இந்த சூழல்கள் தனியுரிமையின் அர்த்தமுள்ள பயிற்சியை விமர்சன ரீதியாக ஆபத்தில் ஆழ்த்துகிறது.  


இதில் குறிப்பாக பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டது, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இது சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துரிமையை தீவிரமாக சுருக்குகிறது. கண்காணிப்பு மற்றும் இடைமறிப்பு என்பது பொது அவசரகால நிகழ்வுகளில் அல்லது பொது பாதுகாப்பின் நலன்களில் மட்டுமே நியாயப்படுத்தப்படுகிறது. இந்த கட்டாய நிபந்தனைகள் ஏதும் தற்போதைய வழக்கில் என்பதால், கண்காணிப்ப என்பது சட்டவிரோதம்.




இந்தியாவில் பெகசஸ் ஸ்பைவேரை எந்தளவிற்கு, எப்படி எல்லாம் பயன்டுத்தி உள்ளனர் எனபதை கண்டறிய உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.”


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு பெகசஸ் தொழில்நுட்பத்தில் மத்திய அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இந்த விவகாரத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தனர். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை தயாரித்த இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகசஸ் தொழில்நுட்பத்தை சரிபார்க்கப்பட்ட அரசாங்கங்களிடம் மட்டுமே விற்பனை செய்வோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. 


இதனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மேற்கு வங்க அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மதன்பிலோகுர் தலைமையில் விசாரணைக்குழுவை நேற்று அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.