கிராமப்புறங்களில் இணைய இணைப்பு வழங்கிட வகை செய்யும் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, கிராமப்புறங்களில் இணைய இணைப்புக்கான கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதியைக் கொண்டு செல்லும் வகையில் பாரத் நெட் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12, 525 கிராமங்களையும் சென்றடையும் வகையில் 50,000 கிலோமீட்டா் தூரத்துக்கு இணையவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 



பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்புத் திட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசுக்குச் சொந்தமான எந்தவொரு இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளா்ச்சித்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.



பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்பது முழுவதும் உட்கட்டமைப்பு சாா்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இணைய இணைப்புக்கான கண்ணாடி இழை கேபிள்களை பூமிக்கு அடியில் பதிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் இன்று காலை கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கும். கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் இணைய இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாரத் நெட் திட்டத்திற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி மற்றும் BECIL ஆகிய இரண்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரூ.1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்டம் ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் L&T மற்றும் BECIL நிறுவன அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.